ஆய்வுச் சிந்தனைகள்


கவிதை - பொதுமைக்கூறுகள்

அறிவியல் ஆக்கங்கள் மனித வாழ்வைப் பல்வேறு கோணங்களில் மாற்றியமைத்துள்ளன. கால மாற்றத்திற்குத்தக்க வாழ்க்கை எவ்வளவு நாகரீகம் பெற்று மாறிய போதும் பழங்கால மனிதர்க்கு இருந்த அந்த உணர்ச்சியே இன்றைய மனிதர்க்கும் உள்ளது. நகை, அழுகை உள்ளிட்ட மெய்ப்பாடுகள் கால, இட வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் மக்களுக்குரிய பொதுவான உணர்வு வெளிப்பாடாக அமைந்துள்ளன. கபிலர், கம்பர் முதலானோரின் காலத்தைவிட இன்று நாகரிகம் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. ஆயின் அறிவுத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மனிதமன உணர்வுகளை மாற்றியுள்ளதா என்பது சிந்தனைக்குரிய வினாவாகும். இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரை படைப்பாளர் தம் சிந்தனைப் போக்கில் கால இடைவெளி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனவா, மாற்றம் இருப்பின் அது எத்தகு நிலையில் உள்ளது என்பன பற்றிய சிந்தனைகள் இக்கட்டுரை அறிய முற்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க்கவிதை பெற்றிருக்கும் புதிய வடிவமே புதுக்கவிதை எனலாம். அமெரிக்கக் கவிஞர் எஸ்ராபவுண்டு (EZRAPOUND) என்பவர் மரபை மீறிய புதிய உத்திகளை உருவாக்க முனைத்தார். அவரும் அவருடைய இலக்கியத் தோழரான டூ லிட்டில் (Too Little) என்பவரும் இணைந்து படிம இயக்கம் என்பதை உருவாக்கினர். வழி வழி வந்த கவிதைப்போக்கை மாற்றிப் புதிய திசையில் கவிதையைப் பயணம் செய்யவைக்க வேண்டுமென்று அவர்கள் கருதினர். நெடிய பாரம்பரியத்தைத் தாண்டி புதிய பாதைக்குக் கவிதையை அழைத்துச்செல்ல விரும்பினர்.

யாப்புக் கட்டுப்பாடுகள், சந்தங்கள் ஆகியவை இல்லாத புதிய நெறிக்கும் கவிதையைச் செலுத்தினர். கவிதை என்பது ஆன்மாவின் உயிர்த்துடிப்பு, அதில் சொற்களால் பொருள் உணர்த்தப் பெறுவதில்லை. உணர்ச்சிகளின் சிதறல்களே கவிதையாக உருவெடுக்கின்றன. மரபோ புதுமையோ எதுவாயினும் உள்ளே பொதிந்திருக்கும் தொனியின் வெளிப்பாடே கவிதையாக உருவெடுக்கிறது.

அக்னிக் குஞ்சென்று கூறுவது இலக்கணப்படிப் பிழையாகும். ஆனால் உணர்ச்சி நோக்கில் அது ஒப்புமையற்ற கவிதையாகிறது. இதைத்தான் எஸ்ரா பவுண்டு தன்னுடைய படிம இயக்கம் (imagist"s movement) என்னும் அமைப்பில் வெளிப்படுத்தினார்.

1. தேவையற்ற சொல் இல்லாமை
2. மரபு ரீதியான யாப்புக் கட்டுப்பாட்டை நீக்குதல்
3. மனதிற்கு இனிமையான இசையொலியை அமைத்தல்
4. கவிதை கூர்மையாக, சுருக்கமாக இருத்தல்
5. வடிவ ஒழுங்கைப்பற்றிக் கவலைப்படாமல் ஏது அமைகிறதோ அதையே வடிவமாகக் கொள்ளல்.

என்ற கோட்பாடுகளோடு உருவான படிம இயக்கத்தைத் தொடக்கத்தில் மரபாளர்கள் எதிர்த்தனர். ஆனால் காலப்போக்கில் படிம இயக்கம் தவிர்க்க இயலாத கோட்பாடாகிப் பலமொழிகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிற்று.

மலையாளக் கவிஞரான கமலாதாஸ் (KAMALA DASS) என்பவர் கவிதையில் தேவையற்ற சொல் ஏதும் இருக்கக்கூடாது என்பதை ஒரு சான்று வழி விளக்கியுள்ளார். ஒரு கட்டிடத்தைக் கட்டும் போது வெளிப்பூச்சு பூசுவதற்கு முன்னர் அங்குமிங்குமாக நிறைய செங்கற்களை எடுத்துவிட வேண்டும். இன்னும் ஒரு செங்கல்லை எடுத்தால் கட்டடம் விழுந்துவிடும் என்னும் நிலை வருமளவிற்குச் செங்கல்லை உருவிவிட வேண்டும். அவ்வாறு ஒரு கட்டடம் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே கவிதையும் இருக்கவேண்டும். தேவையற்ற சொற்களை நீக்கிவிட்டுக் கவிதை நிலைக்கவேண்டும். இன்னும் ஒரு சொல்லை நீக்கினால் கவிதையின் உயிர்ப்பு அழிந்துவிடும் என்னும் நிலை வருமளவிற்குச் சொற்கள் குறைக்கப்படவேண்டும். குறைந்த சொற்களில் பொருளுணர்த்தும் கவிதை நிலைபேறு பெறும்.

சிலவகை எழுத்தில் பலவகைப் பொருளை உரைப்பதே செய்யுள் என நன்னூலில் பலணந்திரியார் குறிப்பிட்டுள்ளார். நாடுகள் மாறினாலும் மொழிகள் மாறினாலும் கால இடைவெளி இருந்தாலும் சில வரையறைகள் எப்போதும் மாறுவதில்லை. பவணந்தியாருக்கும் எஸ்ரா பவுண்டுக்கும் எப்போதும் மாறுவதில்லை. பவணந்தியாருக்கும் எஸ்ரா பவுண்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. இருப்பினும் சிந்தனையால் அவர்கள் ஒன்றுபடுகின்றனர். தேவையற்ற சொற்களின் கூட்டம் உரைநடையாகும்; வரையறை மீறாத சொற்களின் சேர்க்கை கவிதையாகும்" என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமே கவிதையின் இலக்கணம் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் செயலாக்கிக் காட்டினார். குறுந்தொகை என்னும் அரிய இலக்கிய வடிவம் சுருக்கத்தினாலேயே பெயர் பெற்றது.

"புத்த வேங்கை வியன்சினை ஏறி
மயிலினம் அகவும் நாடன்
நண்ணுதற் கொடிச்சி மனத்தகத் தோனே",

என்னும் சங்க அகப்பாடலில் நன்னூலாரும் எஸ்ராபவுண்டும் கண்ட கவிதை இலக்கணம் நிறைவேறி இருப்பதை உணர முடிகின்றது. காட்சிகளைப் படிமங்களாகச் சித்தரிக்க வேண்டுமென்ற புத்திலக்கியப் போக்குமுறை இக்கவிதையில் அமைந்துள்ளது. வேங்கை மரத்தின் பூக்கள் பொன்னிறமானவை. அம்மரத்திலேறி மயில் அகவுகிறது. நீலம், பச்சை, கருமை என்று அழகழகான வண்ணங்களின் கூட்டுச்சேர்க்கையை மயிலின் உடலிற் காணலாம். பொன்னிறப் பூக்களின் நடுவில் நீலத்தின் ஆதிக்கம் செறிந்த மயில் ஏறி நின்று அகவுவது வியப்புக்குரியதாகும். வண்ணங்களின் போட்டியாக அக்காட்சி அமைகிறது. குறுந்தொகைப் புலவர் இக்காட்சியை உற்றுநோக்கித தீட்டியுள்ளார். வேங்கை மரத்தைப் பார்க்காதவர்களும் மயிலைப்பற்றி அறியாதவர்களும் கூட இந்தக்காட்சியில் சிறைப்படுகிறார்கள். எங்கோ இனம்புரியாத ஒரு காட்டில் பொன்னிற வேங்கைப் பூக்களின் நடுவே நின்றுகொண்டு வண்ண மயிலொன்று அகவும் அழகுத்தோற்றம் படிப்போர் நெஞ்சில் படிமமாக நிலவுகிறது.

சிறந்த படைப்பாளர் தம் உள்ளத்து உணர்வைப் பிறர்க்குக்காட்சியாக்கிப் பதியச் செய்ய மிகச்சில அடிகளையோசொற்களையோ மட்டும் பயன்படுத்துவார். ஒரு பெரிய கருநீறமான கல் தொலைவில் தெரிந்தது. யானை போன்றிருந்த அக்கல்லில் தூசு படிந்திருந்தது. பெரும்மழை பெய்தபின் அக்கல்லில் இருந்த மாசு அகன்று. ஒளி வீசியது. இதனால் அக்கல் நீராடி வந்த யானை போன்றிருந்தது. மழைக்கும் முன்பும் பின்பும் அக்கல் யானை போன்று இருந்ததென உணர்ந்தால் புலவரின் உள்ளத்தில் உயிரற்ற கல் உயிருள்ள யானை ஆயிற்று. எனவே பெருமழை பெய்தபோது ஓடி ஒதுங்காமல் மழையிலேயே நிற்கும்யானைக்காக வருந்தினார். மழைவிட்ட பின், களைப்பு மிகுதியால் எங்கும் செல்லமுடியாமல் அங்கேயே தொடர்ந்து நின்றுவிட்டதெனக் கருதினார்.

"மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
பைதல் ஒருதலை சேக்கும்" (குறுந்தொகை.13)

என்பது பாடல். இப்பாடலடிகள் வழி, கல் உயிருடையது என்றோ மழையின் போது ஓடி ஒளியவில்லை என்றோ புலவர் கூறவில்லை.

ஆனால், "வழந்த" "சேக்கும்" என்ற இரு சொற்களால் இக்கருத்தை உணர்த்தியுள்ளார். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற மரபு மரபுக்கவிதைகளைப் போலவே புதுக்கவிதைகளிலும் பின்பற்றப் பெறுகின்றது.

அமெரிக்கக் கவிஞரான வால்ட்விட்மன் என்பவரும் சிறந்த கருத்துக்களைச் சுருங்கச்சொல்லல் என்பதையே தமது "புல்லின் இதழ்கள்" (leafes of grass) என்னும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார். ஆடம்பரமில்லாத எளிய சொற்களால் வடிக்கப்பெற்ற கவிதைகள், உண்மையைத் தோலுரித்துக்காட்டும் மனப்பாங்கு ஆகியவற்றை இந்நூலில் காண முடிகின்றது. கற்பனைகளின் ஊர்வலமே கவிதை என்பதை மாற்றி உண்மைகளின் ஒருங்கிணைப்பே கவிதை என நாட்டியவர் விட்மன். எதைக் காட்டிலும் வல்லது வாய்மை என்பது தமிழ்ப்புலவர் வள்ளுவர் கூறிய குறள்நெறி விட்மனின் கருத்தில் எதிரொலிக்கிறது.

வால்ட்விட்மனின் புதிய கவிதை வடிவத்தைத் (Chaotic) தாறுமாறானது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிட்டனர். மரபு ரீதியாக வந்த வடிவத்திற்குப் புறம்பாகக் கட்டுப்பாடற்ற கவிதையோட்டத்தை ஏற்றுக்கொள்ள இயலாத பழைமைவாதிகள் இதற்கு குற்றக்கணைகளை வீசினர். ஆனால் விட்மன் இத்தகு கண்டனக் குரல்களைப் பொருட்படுத்தவில்லை. தம் இலக்கிய வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் எண்ணற்ற படைப்புகளைப் படைத்தார். "சொற்கள் பொருள்களை ஏந்திச்செல்லும் ஊர்திகளே தவிர அலங்கார விளையாட்டுப் பொம்மைகளல்ல" என்பதை நிறுவுவதற்காக 80 வயதுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருந்தார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி ஞானியாகி மாறி இராமன் புகழ் பாடினார். கள்வராக இருந்த நீலன் மனம் மாறித் திருமங்கையாழ்வார் ஆனார். இவர்களின் செயல்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் நோக்கம் இன்றியமையாதது.

இந்திய நாட்டின் இச்சிந்தனைகளை அறிய அமெரிக்கக் கவிஞருக்கு வாய்ப்பில்லை. இருப்பினும் உணர்ச்சியலைகள் ஒன்றுபட்டதால் சிந்தனைகளும் ஒன்றுபட்டன.

"ஏதிலாரும் எளியர் என்றால் அவர்
தீது தீர்ப்பது" (வாலிவதைப்படலம், பாடல் 68)

என் சிந்தைக் கருத்தென்று பரம்பொருள் இராமன் கூறியதாகக்கம்பர் பாடியுள்ளார். ஆனால் விட்மன் சாதாரண மனிதராக இருந்தும் எளியவர்களைக் கண்டு இரங்கினார். மக்களாட்சியின் மேன்மையையும் மானுடத்தின் உயர்வையும் பாதிக்கப்பட்டவர்களின் இடர்ப்பாடுகளையும் எண்ணி நைந்துபோனார். "இரக்கம் மிகுந்தவர்களின் உள்ளமே எல்லா உணர்ச்சிகளுக்கும் கலைப்படைப்புகளுக்கும் ஏற்றவாறு அமைந்து விளங்கும்" என்பதற்குச் சான்றாக இத்தகு கவிஞர்கள் திகழ்கின்றனர்.

பிற உயிர்களின் துன்பத்தைத் தம் துன்பம் போல் உணர வேண்டுமென்றும், அவ்வாறு உணராவிடில் அறிவினால் பயன் இல்லை என்றும்

"அறிவினான் ஆகவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை" (குறள் 315)

என்ற குறள்வழி வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். பிறரின் இன்பதுன்பத்தைத் தம் இன்ப துன்பம் போல் உணரும் ஒத்துணர்வு சிறந்த படைப்பாளர்களிடம் அமைந்திருப்பது இயல்பு.

தமிழ்க்கவிஞர் கண்ணதாசன் "அனுபவிக்க வயதில்லையே" என்று ஏக்கத்தோடு எழுதினார். அமெரிக்கக் கவிஞர் வால்ட்விட்மனோ இதே சிந்தனையை "முதுமையின் எதிரொலி" (ECOSS OF OLD AGE) என்ற தலைப்பில் எழுதினார். கண்ணதாசன் விலைமகளிரைப் பற்றி எழுதினார் "இரவில் மலர்ந்து பகலில் உதிர்ந்துவிடும் அதிசய பூக்கள்" என்று எழுதினார். விட்மன் தாம் எழுதிய "முகமறியாத ஒரு பொது பூ பரத்தைக்கு" (To an unknown prostitute) என்ற கவிதையில் பரத்தையரைப் பற்றி இரக்கத்தோடு சிந்தித்துள்ளார். அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கும் உனக்கும் என்ன வேறுபாடு பெண்ணே! விதி உன்னை இப்படிச் செலுத்தியிருக்கலாம். ஆனால் அவருக்கும் உனக்கும் ஆன்ம அடிப்படையிலான வேறுபாடு ஏதுமில்லை. சாவின் போது உனக்கும் அவருக்கும் ஒரே நிலை தான் என்று மனிதாபிமானத்தோடு பாடியுள்ளார்.

முடிவுரை

உணர்த்தப்படும் உணர்ச்சியின் சிறப்பியல்பு அவ்வுணர்ச்சி சென்று பரவுதலிலுள்ள தெளிவு, கலைஞரின் உள்ளத்தின் உண்மைத்தன்மை ஆற்றல், ஆகியவை பொருந்த அமையும் போது அப்படைப்பு சிறக்க அமையும். கருத்தை முழுமையாக வெளிப்படுத்தல், இயைபுடைய தாக்கல் ஆகியவற்றுக்கு அடிப்படையாக இருப்பதே "வடிவம்" ஆகும். காலம், மொழி, வடிவம் இவற்றைக் கடந்த நிலையில் மரபுக் கவிதையாயினும் புதுக்கவிதையாயினும்
தேவையற்ற சொற்கள் இல்லாமை
ஆழமான உணர்வின் உண்மை வெளிப்பாடாக இருத்தல்
மனிதநேயமும் ஆன்ம நேயமும் சான்ற அணுகுமுறை
ஆகியவை பொதுமைக்கூறுகளாக அமைதல் வேண்டும்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link