ஆய்வுச் சிந்தனைகள்


இலக்கியம் இயம்பும் இசைக்கருவிகள்

பழந்தமிழர்களுடைய வாழ்க்கை முறைகளையும் கலை, பண்பாடு முதலியவற்றை எடுத்துக்காட்டும் கண்ணாடியாக இருப்பது இலக்கியங்களே. தமிழர்கள் பறவை, மிருகம், அருவி போன்ற இயற்கைப் பொருட்களோடு இசையை ஒப்பிட்டு அனுபவித்ததை சங்கப் பாடல்கள் பல கூறுகின்றன.

"தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிய" (அகத் 18-20)

என்று தொல்காப்பியர் மொழிவதிலிருந்து அவர்க காலத்திற்கு முன்பே தமிழகத்தில் இசைக்கருவிகள் ஏற்றம் பெற்று இருந்தன என்பதை நம்மால் அறிய முடிகிறது.

இசை தோன்றுமுன்னரே இசைக் கருவிகள் தோன்றிவிட்டன என்று கூற வேண்டும். ஏனெனில் இயற்கையில் எழும் பல ஒலிகள் இசை வகையைச் சேர்ந்தவை. கற்காலத்தில் வேட்டையில் ஈடுபட்ட ஆதிமனிதன் தன் வில்லின் நா€ணை இழுத்து விடும்போது அது செய்த ஒலியில் ஈடுபட்டு நரம்புக் கருவியை கண்டுபிடித்திருக்க வேண்டும்.

கல்லினை குடைந்து அதன் மேல் விலங்குகளின் தோலை இழுத்துக்கட்டி அதை தோல்கருவியாக பயன்படுத்தியுள்ளனர். முரசு போன்ற தோற்கருவிகளே மிகத் தொன்மையான இசைக் கருவிகள் என்று பல நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. யாழ் போன்ற நரம்புக் கருவிகள் பின்னர் தோன்றியவை.

இசைக் கருவிகளை இரு கூறாகப் பிரிக்கலாம். ஒன்று பண்ணிசைக் கருவிகள் மற்றொன்று தாளவிசைக் கருவிகள்ள. மேலும் இசையெழுப்பும் விதத்தைக் கொண்டு நரம்புக்கருவி, துளைக்கருவி, தோற்கருவி, கஞ்சக்கருவி எனவும் பிரிக்கலாம்.

பழந்தமிழ் இலக்கியங்களில் யாழ் பெற்ற சிறப்பிடத்தை சங்கப்பாடல்கள் பல நமக்கு உணர்த்துகின்றன. நரம்புக் கருவிகளில் மிகவும் தொன்மை வாய்ந்தது யாழ். ஐவகை நிலப் பெயர்களுடன் யாழ் குறிப்பிடப்பட்டுள்ளன. பாணர்கள் புரவலர்களைப் பாடிப் பரிசு பெறும்போது கையில் யாழிசைத்துப் பாடுவர். அது இலக்கண முறை நிரம்பியது என்பதை,

கையது கடனிறை யாழே (புற 69-7)

புறநானூற்று வரிகளும் யாழில் செவ்வழிப் பண்ணை இசைத்து இறைவனை வழிபட்டதை,

செவ்வழி நல்யாழிசையினென் பையெனக்
கடவுள் வாழ்த்தி பையுள் மெய்ந்நிறுத்தி (அக 4:15-16)

என்று அகநானூற்று வரிகளும் உரைக்கின்ற மேலும், சீறியாழும், பேரியாழும் சங்க காலத்தில் புழக்கத்தில் அதிகமாக இருந்திருக்கின்றன என்பது பல பாடல்களால் நமக்குப் புரிகிறது.

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின் பனுவற் பாணர் உய்தென (புற 127:1)

அதோடு அரசர்கள் யாழிசைக் கேட்டு மகிழ்ந்து பாணர்களுக்குக் கொடுத்து பாராட்டியுள்ளனர்.

அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்
பாணர் ஆர்ப்ப பலகலம் உதவி
நாளவை யிருந்த நனைமகிழ் திதியன் (அக 31:10-12)

பேரியாழ் என்பது இனிமையாக இசை தரக்கூடிய கருவி என்பதை அதை இடப்பக்கம் வைத்து வாசிப்ர் என்பதையும் பதிற்றுப்பத்து இயம்புகிறது.

வாங்கிடை மருப்பில் தீந்தொடை பழுனிய
இடனுடை பேரியாழ் பாலை பண்ணி (பதிற் 66:1-2)

இதே செய்தியை சிலம்புக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தம்முடைய உரை மேற்கோள்ளவும் குறிப்பிடுகிறார்.

நல்லெழின் மடந்தை நல்லெழில் காட்டி
அல்லியம் பங்கயத் தயனினிது படைத்த
தெய்வம் சான்ற தீஞ்சுவை நல்யாழ்
மெய்பெற வணங்கி மேலோடு கீழ்புணர்த்
திருகையின் வாங்கி இடவயின் இரீஇ (சிலம் 8:23-9)

நரம்புக் கருவியான யாழ் - வீணையாக வளர்ச்சி பெற்றது திருஞான சம்பந்தர் காலத்தில் தான். சம்பந்தருடைய பாடல் குறிப்பிலிருந்து நாம் இதை அறியலாம்.

யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டார் அவரெல்லாம்
ஊழின்மலி வினை போயிட உயர்வானடைவாரே (திருவீழிமிழலை நட்டபாடை 11:1-2)

என்று பாடி வந்த சம்பந்தர் திருத்தருமபுரத்தில் யாழ்முரிப்பன் பதிகம் பாடியபோது திருநீலகண்ட யாழ்ப்பாணரால் அப்பண்ணை வாசிக்க முடியவில்லை, இந்நிகழ்ச்சிக்குப்பின்,

வேயுறு தோளி பங்கன் விட முண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி

என்று போயிறு பதிகத்தில் வீணைக்கு மிக நல்ல என்று அடை கொடுத்து சிறப்பிக்கிறார். வீணை பாடல் வாசிக்க ஏற்ற கருவி என்பதை பாடல்வீணை, பண்ணமர் வீணையினான் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். பண்ணுலாம் பாடல் வீணை பயில்வானோர் பரமயோகி பண் (திருச்சாத்த மங்கை பஞ்சமம்) இக்கருத்தை வலியுறுத்தும் விதமாக நாவுக்கரசர், மாசில்வீணையும் மாலை மதியமும் என்று பாடி வீணை எனும் நரம்புக் கருவியை சிறப்பித்துள்ளார்.

குழல் : தமிழ் மக்களின் இசைக் கருவிகளில் முந்தையது குழல் கருவி என்று சொல்லப்படுகிறது. துளை வழியாக காற்றைச் செலுத்தி ஒலியை முறையாக எழச் செய்து இசை வகுத்துச் சுவை காண்பது குழலிசைக் கருவியின் பயன். குழலினிது யாழினிது என்று வள்ளுவர் குழலை முதலிலே வைத்துள்ளார். பண்டையத் தமிழர்க் குழலைக் கையாண்டுள்ள செய்தியை நற்றிணை படம் பிடித்துக் காட்டுகிறது (கொன்றை மரத்தால் செய்த குழல்)

பல்லா தந்த கல்லாக் கோவலர்
கொன்றையற் தீங்குழல் மன்று தோறு இயப்ப (நற் 364:9-10)

ஆம்பல் என்று கஞ்சத்தாற் செய்த குழலைக் குறிஞ்சிப்பாட்டும் சுட்டுகிறது.

ஆம்பலந் தீங்குழல் தெள்விளி பயிற்ற (குறிஞ் 222)

குழல் கருவியில் கண்கள் (துளைகள்) உள்ளன. அவை பிற கருவிகளோடே வாசிக்கப்பெற்றன என்பதை பரிபாடல் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒரு திறம் கண்ணார் குழியின் கரைபு எழ
புரி நரம்பின் கொளைப்புகல் பாலை ஏழும்
எழுப்புணர் யாழும் இசையும் கூடக்
குழலளந்து நிற்ப முழுவெழுந்தார்ப்ப
மன்மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க (பரி 7:77-80)

பிற இசைக் கருவிகளோடு குழல் வாசிக்கப் பட்டதை சம்பந்தரும் பாடிப் பரவியுள்ளார்.

துளைபயிலுங் குழல்யாழ் முரலத்துள்ளிய இன்னிசையாற்றுளதந்த (கிழைத்திருக்காட்டப்பள்ளி நட்டபாடை 6:1)
ஒலி செய்த குழலின் முழுவதியம்ப ஓசையால் ஆடலறாத ( திருப்பந்தணை - புறநீர்மை 8:1-2)

தாள விசைக்கருவிகள்: தோற்கருவிகள் பழங்காலத்தில் செய்திகள் அறிவிப்பதற்கும் திருவிழா மற்றும் போர்க்களத்தில் பெரும்பான்மை உபயோகப்பட்டன. பண்ணிசைக் கருவிகளுக்குத் துணையாகவும் தனித்தும் தோற் கருவிகள் இயக்கப்பட்டு வந்ததை சங்கப்பாடல்கள் இயம்புகின்றன.

தண்ணுமை: மருத நிலத்தில் நெல்லரிப்பவர் அக்கழனிகளில் வாழும் பறவை முதலிய சிற்றுயிர்கள் ஓட்டுவதற்கு தோற்கருவிகளைக் கையாண்டனர்.

வெண்ணெல் அரிநர் தண்ணமை வெரிஇச் (மலை.471)

அரித்தெழும் ஓசையை உடைய இக்கருவி போர்க்களத்தில் வீரர்களை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட தன்னரு மறவர்
வெற்றி தரு வேட்கையர் (புற 270:8-10)

பின்னர், இக்கருவி முழவு என்னும் பொதுச் சொல்லால் அழைக்கப்பட்டது. சங்க கால மக்கள் முழவை பலாப்பழத்துடன் பொருத்தி ஒப்புமை கண்டனர்.

கானப் பலவின் முழவு மருள் பெரும்பழம் (மலை 511)
முழவிமைந்த பெரும்பழம் (பதிற் 81:99)
முழவின் ஒரு பக்கம் மண் (மார்ச்சனை)

பூசப் பெற்றிருப்பதையும், அது இம்மென ஒலியுடன் முழக்கப்படுவதையும் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.

மண்ணார் முழலின் இசை எழ (பரி 17:13) முழலின்
மண்ணார் கண்ணின் இம்மென இமிரும் (நற் 139:5-6)

சம்பந்தப்பெருமான் தம்முடைய தேவாரத்தில்,
மறைவனர் பாடலினோடு மண்முழ வங்குழன் மொந்தை
பறைவனர் பாடலினாரும் பாண்டிக் கொடுமுடியாரே (திருபாண்டிக் கொடுமுடி - காந்தாரம் 4:3-4)

இம்முழவு மிக மெல்லிய ஓசையுடையது என்பதை மந்தமுழவு என்று சிறப்பிக்கிறார் சம்பந்தர்

மந்தம் முழவம் மழலை ததும்ப வளரநிழல்
செந்தண்புளமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி - குறிஞ்சி 3:1-2)

பறை: செய்திகளை ஓரிடத்திலிருந்து அறிவிக்கப் பயன்படுவது பறை எனும் தோல்கருவியாகும். மழலைத் தமிழர் மொழியான மலையாளத்தில் பறை என்றால் சொல்லு என்னும் பொருளில் இன்றும் கையாளப்பட்டு வருகிறது. அரித்தெழும் ஓசையுடைய இப்பறை எனும் கருவி காப்பிய வரிகளிலும் சொல்லப்பட்டுள்ளது.

அரிப்பறை யனுங்க வார்க்கு மேகலை (சீவக 2082)

மேலும் குறிஞ்சி நிலத்திற்குரிய பறையான தொண்டகச் சிறுபறை குரவைக்கூடத்தின் போது கையாளப்பட்டிருப்பதை நக்கீரர் நம் கண்முன் காட்டுகிறார்.

குன்றகச் சிறுகுடி களையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறை குரவை அயர (திருமு196)

இக்கருவி பெரும்பாலும் சங்கு எனும் கருவியுடனேயே வாசிக்கப் பெற்றிருப்பதைச் சம்பந்தர்,

பறையுஞ் சங்கு மொலிசெய் பராய் துறை
அறைய நின்ற வடிகளே (மேகராக 6:2)

சங்கு: ஓர் இயற்கையான இசைக்கருவி. இறை வழிபாட்டில் சங்கு ஒலிக்கப்படுவதை இன்றும் நாம் கண்டு வருகிறோம்.

வயிரெழுந்திசைப்ப வால்வளை ஞரல (திருமு 120)

என்று நக்கீர தேவ நாயனார் "சங்கு" பற்றி குறிக்கிறார். ஆண்டாள் நாச்சியார்

மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றாத

என்று பாடியுள்ளது இசைக்கருவிகள் காலந்தோறும் தொன்றுதொட்டு வருவதைக் காணமுடிகிறது.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் கலைகள் பலவும் திருக்கோவில்களை அடிப்படையாகக் கொண்டே வளர்ச்சிபெற்று வந்துள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்கோவில்களில் வழிபாடு நிகழும்போது பல்வேறு இசைக் கருவிகள் வாசிக்கப் பெறுவது மரபாகும். ஆளுடையபிள்ளையார் தமது திருமுறையில்,

காலையோடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ் முழவு காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து மாதவர்க
ளேத்தி மகிழ் மாகறலுளான் (திருமாகறல் சாதாரி 3:1-2)

ஒரு நாட்டின் இசை வளர இசைக்கருவிகள் மிக முக்கியப் பங்கு வகித்திருப்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்குத் தெளிவுடன் விளக்கியுள்ளதை உய்ந்துணர, இசைக்கருவிகளை தமிழர்களாகிய நாம் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link