ஆய்வுச் சிந்தனைகள்


சைவ சமயம் உணர்த்தும் மும்மலங்கள்

தென் இந்திய சமயங்களில் சைவ சமயக் கோட்பாடுகள் மிகவும் விரிவான விலைமதிப்பற்ற கோட்பாடுகளாக இருந்து வந்துள்ளன. சைவம் என்பதற்கு பாசப்பற்றாகிய உலகப் பற்றினை விட்டு நீங்கி இறைவனின் திருவடிகளைப் பற்றுவது எனப் பொருள் கொள்ளப்படுகிறது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்தின் மூலமாக 5000 ஆண்டுகளுக்கு முன்பே சக்தி வழிபாடும், சிவவழிபாடும் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மிகவும் பழமையான ரிக் வேதம், இதிகாசங்களில் கூடு சிவலிங்க வழிபாடுகள் இருந்ததற்கான சான்றுகளும், சிவன் மேலானவன் என்ற கருத்தும் இருந்து வந்துள்ளது. மேலும் சமய கோட்பாடுகளில் மிகவும் சிறந்ததாகவும் தெளிவான வாழ்க்கை முறைகளை சுட்டிக் காட்டும் ஒன்றாகவும், திராவிட மக்களின் அறிவாற்றலுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும், தமிழ் மக்களை மிகவும் கவர்ந்த நிலையில் சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளன. இந்திய தத்துவங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த முனிவர்கள் தங்கள் வாழ்வில் கண்ட உண்மைகளை அனுபவத்தின் மூலமாக சரிபார்த்து ஏற்படுத்தப்பட்ட இறையருள் பெற்ற கோட்பாடுகளாகவும் சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளன. உலகிலுள்ள அனைத்து விதமான சமய கருத்துக்களும், கோட்பாடுகளைத் தரும் நிலையில சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளது. மேலும் இயல்பியல் கூறிய கற்பனையொளியுடனும், உணர்ச்சி பெருக்குடனும், வெளிப்பாட்டழகுடனும் கூடிய பக்தி இலக்கியச் செல்வத்தினை தமிழ் உலகில் சைவத்தினை தவிர வேறு எச்சமயமும் எய்தவில்லை என பெர்னார்டு என்பவர் சைவ சமயக் கருத்துக்களைக் குறித்து சிறப்பித்துக் கூறுகிறார். சைவ சமயத்திற்கு சான்றுகளாக வேதங்கள், திருமுறைகள் சிவாகமங்கள், சாத்திர நூல்கள் போன்றவை உள்ளன. வேதங்களும் ஆகமங்களும் சைவ சமயத்திற்கு பிரமாண நூல்களாக அமைந்துள்ளன. சைவ சமயத்தில் வேதங்கள் பொது பிராமணமாகவும், வேதங்களில் சுருங்க கூறியுள்ள கருத்துக்களை விரைவாக, தெளிவாக எடுத்துக்கூறி உயிர்களில் காணப்படும் மலங்களை கெடுத்து இறையருளைப் பெற்றுத் தரும் ஒன்றாகவும், முப்பொருட்களின் (பதி, பசு, பாசம்) தன்மைகளை விளக்கி கூறும் ஒன்றாகவும் ஆகமங்கள் உள்ளதால் சைவ சமயம் இதனை சிறப்பு பிரமாணமாகவும் கொள்கிறது. மேலும் சைவசமயக் கோட்பாடுகள் வேதகாலத்தில் வித்திடப்பட்டு ஆகமகாலத்தில் துளிர்விட்டு, திருமுறை ஆசிரியர்கள் காலத்தில் செடியாகி, சாத்திர நூலாசிரியர்கள் காலத்தில் மரமாகி காய்த்து கனியை தந்தது, எனவும் கருதுவர். மேலும் இவ்வுலகில் அனைத்தையும் கடந்து நிற்கும் உண்மையினைத் தேடிச் செல்லும் நிலையில் சைவ சமயக் கோட்பாடுகள் உள்ளதால், இவ்வுலகில் காணப்படும் அனைத்துச் சமயங்களிலும் மேலான சமயமாக சைவ சமயம் கருதப்படுகிறது. சைவ சமயத்தில் சித்தாந்தம் என்ற சொல் நிலை நிறுத்தப் பெற்ற உண்மை எனவும் மூற்று முடிந்த மெய்பொருட்கொள்கை எனவும், தத்துவச் சிந்தனையின் இறுதிமுடிவிடம் எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வாறு சைவ சமயக் கோட்பாடுகள் பழங்காலம் தொட்டு தமிழ் பேசும் மக்களிடையே மட்டும் மிகுதியாக வழங்கப்பட்டு வந்துள்ளதால் இதனை தமிழர்களுக்கே உரிய சிறந்ததொரு சமயமாகக் கருதலாம்.

சைவ சமயத்தில் இறை (பதி) உயிர் (பசு) கட்டு (பாசம்) என்ற முப்பொருட்களின் உண்மை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சைவ சமயம் உயிர்களை (ஆன்மா) பசு எனக் கருத காரணம் அது பாசம் என்ற கட்டுக்குள் சிக்கி இருப்பதினால்தான். உயிர்களை கட்டுப்படுத்தும் தளைகளுக்கு பாசம் எனப் பெயர். உலக வாழ்வில் எது கீழ்த்தரமானதோ உயிர்கள் எவைகளை விட்டு விலகி நிற்க வேண்டுமோ அவைகளையோ பாசம் என சைவ சமயம் கூறுகிறது. சைவ சமய கருத்துப்படி இந்த பாசங்களான ஆணவம், கன்மம், மாயை என்பன இறைவனைப் போன்றே என்றும்அநாதியாக உயிர்களைப் பற்றியிருக்கும் கயிறாக உள்ளது. சைவ சமயக் கருத்துப்படி பசுவாகிய உயிர்கள் (ஆன்மா) தன் நிலையில் எங்கும் நிறைந்த, எல்லையற்ற தன்மை கொண்ட அனைத்தையும் அறிந்த உணர்வுடைய பொருளாக இறைவனைப் போன்றே எக்காலத்திலும் அழியாது நிலைத்திருக்கும் பொருளாகக் காணப்பட்டாலும் பாசங்களான மலங்களுடன் இணைவதால் இத்தகைய உயிர்கள் ஒரு எல்லைக்குட்பட்டதாகவும், அறியாமை என்ற உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு பிறப்பு இறப்பு போன்ற துன்பங்களை நுகரும் நிலையில் உள்ளன. மேலும் இத்தகைய உயிர்கள் பருப்பொருட்கள் நிறைந்த இந்த உலகுடனும், உடலுறுப்புகளுடனும், புலனுறுப்புகளுடனும் இணைந்து காணப்பட்டாலும் இத்தகைய பருப்பொருள் உலகு, உடலுறுப்புகளிலிருந்து மாறுபட்ட நிலையில் காணப்படுகிறது எனச் சைவ சமயம் கூறுகிறது. இத்தகைய உயிர்கள் தன் நிலையில் உலகப் பொருட்களின் மாறுபாடுகளிலிருந்து செயல்பாடுகளிலிருந்து மிக்க வேறுபாடுகள் கொண்ட நிலையில்லாது அதே சமயம் இறைவனது ஆன்மீகமான தூய்மையான தன்மையுடனும் இணையாத நிலையில் இருப்பதால் தான் சைவ சமயம் உயிர்களை பசு என கருதுகிறது. இத்தகைய உயிர்கள் இவ்வுலகப் பொருட்களால் கவரப்பட்டு பாசநிலைகளிலிருந்தும் பதியாகிய இறைவனது தூய்மையான செயல்பாடுகளிலிருந்தும் வேறுபட்ட நிலையில் அகங்காரத்தின் அறியாமையின் விளைவாக உலக விவகாரங்களில் சிக்குண்டு அனைத்து காரியங்களையும் செயல்பாடுகளையும் தானே செய்வதாக கருதி அதன் பயனாக இன்ப துன்பங்களை நுகர்ந்து செயலற்ற நிலையில் காணப்படுகிறது.

சைவ சமயம் உயிர்களை கட்டியிருக்கும் பாசங்களை ஆணவம், கன்மம் மாயை என மூன்றாக கொண்டு இந்த பாசங்களும் இறைவனைப் போன்றே அநாதியாக என்றும் இவ்வுலக உயிர்களுடன் இணைந்து இருக்கும் நிலையில் காணப்படுகிறது என கூறுகிறது. சைவ சமயம் உயிர்களைப் பற்றியிருக்கும் ஆணவ மலத்தினை சகஜ மலம் எனவும், கன்மம், மாயை என்ற இரு மலங்களையும் ஆகந்துக மலம் எனக் கூறும். இத்தகைய ஆணவமலம் இயற்கையில் அனைத்து உயிர்களிடமும் பற்றியுள்ள நிலையில் உள்ளதாலும் உயிர்களின் அறிவாற்றலுக்கு முதல் தளையாக இருப்பதாலும், இதனை மூலமலம் எனவும் அது எவ்வாறு நெல்லில் உமி ஒட்டிக் கொண்டுள்ளதோ செம்பில் களிம்பு ஒட்டிக் கொண்டுள்ளதோ அது போல உயிர்களிடத்தில் காலங்காலமாக ஒட்டிக் கொண்டுள்ளதோ எனவும் உயிர்கள் இத்தகைய மலங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமாக அதன் அறிவும், சக்தியும் குறைக்கப்படும் நிலையில் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் நிலையில் காணப்படுகிறது என சைவ சமயம் கூறுகிறது.

சைவ சமய கருத்துப்படி உயிர்கள் அனைத்து விதமான நற்செயல்களுக்கும் இருப்பிடமாகக் காணப்பட்டாலும் உயிர்களிடத்திலுள்ள ஆணவ மலசேர்க்கையின் விளைவாக இவ்வுலகிலுள்ள அனைத்து பொருட்களும் தன்னுடையவை, அனைத்துப் பொருட்களின் சுகத்தையும் இன்பங்களையும் தானே அனுபவிக்க வேண்டும் என எண்ணுகிறது. இத்தகைய உயிர்கள் தன் நிலையில் தூய்மையாக காணப்பட்டாலும் ஆசை, அறியாமை, மன இருள் போன்றவைகளின் தொடர்புகளில் சிக்கி அதன் பயனாக கர்மவினையின் விளைவுகளை அனுபவிக்கும் நிலையில் காணப்படுகிறது. சைவ சமய கருத்துப்படி இத்தகைய ஆணவ மலம் ஒன்றேயாயினும் தன்னிலையில் உலக உயிர்களின் மத்தியில பல நிலைகளில் செயல்பட்டு தன் நிலையினை வெளியே காட்டிக் கொள்ளாத நிலையில் இருளாக மறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாக காணப்படுகிறது. சைவ சமயத்தில் இத்தகைய ஆணவ மலம் இருள் எனவும் இந்த இருளினை உயிர்களால் பார்க்கவோ அளக்கவோ இயலாது எனவும் இம்மலம் பிரபஞ்சம் தோன்றும் முன்பே இருந்து இந்த பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை தொடங்கச் செய்யும் நிலையிலிருந்து உயிர்களின் உணர்வு நிலைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் காணப்படுகிறது. இம்மலமாகிய இருளினை புலன்களாவோ சிந்தனைகளாகவோ அளக்க இயலாது. உலகில் நாம் காணும் இருள் பிற பொருட்களை மறைத்தாலும் தன் நிலையினை மறைக்காது வெளிப்படுத்திக் காட்டாது உயிர்களின் பார்வையிலிருந்து மறைத் செயல்படக்கூடிய நிலையில் காணப்படுவதால் இதனை இருளினும் இருள் என சைவ சமயம் கூறுகிறது. மேலும் உயிர்களுக்கு உலக வாழ்வில் ஆசை, மோகம், நேசம், கர்வம், சந்தோசம் போன்ற பண்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக வாழ்வில் விரும்பிய பொருள் கிடைத்த நிலையில் இன்பத்தையும் கிடைக்காத நிலையில் துயரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையில் காணப்படுகிறது.

சைவ சமயக் கருத்துப்படி எவ்வாறு அரிசி உமியினால் மூடப்பட்டுள்ளதோ, கடல் நீர் உப்பினால் கவரப்பட்டுள்ளதோ அது போல இந்த ஆணவ மலம் ஆரம்பம் தெரியாத காலத்திலிருந்தே உயிர்களுடன் இணைந்து உயிர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறாக அமைந்து உயிர்களின் பண்புகளை மறைக்கும் நிலையில் காணப்படுகிறது. மேலும் உயிர்கள் அறியாமையின் விளைவாகத் தான் இவ்வுலகிலுள்ள பொருட்களை மனதில் கொண்டு அவைகளை அடையும் வழிமுறைகளை தேடிச் செல்வதன் மூலமாக புலன் இன்பங்களுக்கு அடிமையுற்று மறுபிறவிக்களுக்குரிய வழிமுறைகளைத் தேடிச் சென்று தனது ஆன்மீகமான தூய்மையான இயல்பினை இழக்கும் நிலையில் காணப்படுகிறது. உயிரின் வாழ்வில் இத்தகைய ஆணவமலம் நிரந்தரமாக காணப்படும் நிலையிலிருப்பதால் இம்மலத்தின் தொடர்புகளிலிருந்து துன்புறும் உயிர்களை விடுவிக்க ஆணவ மலத்தின் சக்தியினை போக்க இறைவன் உயிர்களுக்கு ஆனந்தமான அறிவின் உச்சியான சிவஞானத்தை அளிக்கும் நிலையில், உயிர்கள் ஆணவ மலத்தினால் ஏற்படும் துன்ப நிலைகளிலிருந்த தன்னை விடுவித்து இன்பமாக வாழும் நிலையில் காணப்படுகிறது என சைவ சமயம் கூறுகிறது.

மேலும் உயிர்கள் தன் நிலையில் ஆணவ மலம் இருப்பதனை உணராத நிலையில் காணப்படுவது போல தன்னில் இறையருள் இருப்பதனையும் உணராத நிலையில் காணப்படுகிறது. உயிர்கள் கர்மவினைகளுக்கு காரணமாக உள்ள மலங்களின் தொடர்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ள இறைவனின் அருள் தேவைப்படுகிறது. எவ்வாறு ஒருவனின் சரீரத்திலுள்ள வியாதி அவனது வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியும் நிலையிலிருப்பது போல உயிர்கள் கர்மவினையின் விளைவுகளால் புலனின்பங்களுக்கு அடிமையுற்று அதன் பயனாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையினை இறைவன் அறிந்த நிலையில் காணப்படுகிறான். ஆனால் எவ்வாறு தன்னருகேயிருக்கும் தோழனை அறியாத நிலையில் இருப்பதுபோல உயிர்களும் தன்னருகேயிருந்து கர்மத்தில் விளைவுகளில் சிக்கி துன்புறும் நிலையிலிருந்து காப்பாற்றும் விடுவிக்கும் நிலையில் இறைவன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்ற உண்மையினை மறந்த நிலையில் காணப்படுகின்றன. பாற்கடலில் வசிக்கும் மீன் தனது பசியினைப் போக்க சிறு சிறு பூச்சிகளை தேடிச் செல்வது போல உயிர்களும் இறையருளை மறந்து புலன் இன்பங்களை நாடிச் செல்வதன் மூலமாக தனது உண்மை நிலையினை மூழ்கடித்துக் கொள்ளும் நிலையில் காணப்படுகிறது. மேலும் உயிர்களிடத்தில் காணப்படும் ஆணவமலம் உயிர்களின் குணமாக அல்லது உயிரின் குற்றமாக அதாவது எவ்வாறு கண்ணின் முன் தோன்றும் படலம் ஒரு குற்றமாகக் காணப்படுகிறதோ, அது போல உயிரின் உண்மை நிலை மறக்கும் நிலையில் இம்மலம் ஒரு குற்றமாக அமைகிறது. கண்ணின் முன் தோன்றிய படலத்தை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றும் நிலையில் கண் ஒளி பெறுவது போல இறைவனாகிய வைத்தியன் மூலம் ஞானமாகிய வாளினைக் கொண்டு உயிர்களில் காணப்படும் மலமாகிய படலத்தினை அறுக்கும் நிலையில் உயிர்கள் உண்மையறிவினைப் பெறும் நிலையில் காணப்படுகிறது என்று சைவ சமயம் கூறுகிறது.

மேலும் உயிர்கள் இந்த உலகின் உண்மையான இயல்பினை உணராத நிலையில் தான் இத்தகைய உலக இன்ப துன்பங்களில் நாட்டம் கொண்டு துன்புறுகிறது எனவும் இதற்கு மூல காரணம் உயிர்கள் மலங்களுடன் இணைந்து செயல்படுவதேயாகும் எனவும் சைவ சமயம் கூறுகிறது. உயிர்கள் இறைவனின் அருள் சக்தியான திரோதான சக்தியின் பயனாக உலகப் பொருட்களின் உண்மை நிலையினை உணர்ந்து இத்தகைய உலக அனுபவங்கள் யாவும் தற்காலிகமானவை நிரந்தமற்றவை என்பதனை உணர்ந்து இத்தகைய உலக அனுபவங்களில் நாட்டம் கொள்வதால் ஏற்படும் இன்ப துன்ப நிலைகளைக் கடந்து தன் நிலையில் தூய்மையாக இன்பமான நிலையில் காணப்பட வேண்டும் என சைவ சமயம் கூறுகிறது. உயிர்கள் மலங்களாகிய இருளிலிருந்து விடுபட இறைவன் தனு, கரண, புவன, போகம் என்ற மாயா காரியங்களை தனது கருணையின் அதாவது அழுக்கடைந்த ஆடையினை தூய்மை செய்ய உவர் மண் சேர்ப்பது போல மலங்களின் தொடர்புகளினால் மறைப்பூண்டு செயலற்றுத் துன்புறும் உயிர்களுக்கு இன்பம் தரும் நிலையில் இவைகள் இருந்தாலும் இவைகளையே உயர்ந்தவை, நிலையானவை என்று உயிர்கள் கருதாது என்றும் நிலைத்த இன்பம் தரும் இறையருளை நாடிச் செல்லுதல் வேண்டும் எனவும் இவைகளெல்லாம் இருளில் தடுமாறுபவருக்கு மெழுகுவர்த்தி பயன்படுவது போல உயிர்களின் நிலைகளுக்கு தகுந்தவாறு உதவக்கூடிய நிலையில் உள்ளன எனவும் சைவ சமயம் உணர்த்துகிறது. மேலும் ஆணவ மலச் சேர்க்கையால் சிக்குண்டு துன்புறும் உயிர்கள் விஞ்ஞான கலர் எனவும் ஆணவம், கன்மம் என்ற இரண்டாலும் கட்டுற்று துன்புறும் உயிர்கள் பிரளயா கலர் எனவும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தாலும் கட்டுற்ற உயிர்கள் கலர் எனவும் கருதப்படுகிறது.

சைவ சமயத்தில் ஆணவ மலம் எனில் அணுத் தன்மையைச் செய்வது என்ற நிலையில் பொருள் கொள்ளப்படுகிறத. இத்தகைய ஆணவமலம் ஒன்றாயினும் தன் நிலையில் பல சக்திகளை கொண்டதாய் உயிர்களின் அறிவையும் தொழிலையும் மறைத்து வினை முதலாக செயல்களில் ஈடுபடுத்தி நிலைத்த பொருளை மறைத்து நிலையற்ற உலக நிலைகளில் பங்கு கொள்ளச் செய்து துன்புறச் செய்யும் நிலையில் உள்ளது. இத்தகைய உயிர்கள் இயற்கையில் அறிவுடையதாயினும் மலங்களின் சேர்க்கையால் இருளில் அகப்பட்ட கண் போல எதனையும் அறியாத, உணராத மலங்களின் தன்மைகளில் சார்ந்திருக்கும் நிலையில் உயிர்களின் அறிவுத்தன்மையினை விபரீதமாக்கி உலகின் இன்ப துன்ப போகங்கள் அனைத்தையும் நுகர்பவன் நானே என எண்ணச் சொல்லும் நிலைக்கு அதோநியமிகா சக்தி எனவும், அதோநியமிகம் எனில் கீழே வீழ்த்தும் சக்தி அல்லது பொருளின் உண்மையியல்பினை தவறாக எண்ணச் செய்யும் சக்தி எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

உயிர்களில் காணப்படும் ஆணவ மலம் உயிர்களோடு சம நிறைவு கொண்டதாய் உயிர்களின் அறிவு செயல்களை விளங்கவொட்டாது பிணித்து நிற்கும் ஒன்றாய் மாயை, கன்மங்கள் உயிரின் கண் அடங்கும் நிறைவுப் பொருளாய் உயிர்களில் கலந்துள்ள ஆவண மல பிணிப்பினைப் போக்க இறைவனால் செலுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதால் இதனை ஆகந்துகமலம் அதாவது இடையில் சேர்க்கப்பட்டது என்று பொருள் கொள்ளலாம். அதாவது ஆடையிலுள்ள கறையினை நீக்க சலவைப் பொருட்கள் இணைத்து நன்றாகச் சுத்தம் செய்யும் சலவை தொழிலாளியைப் போல உயிர்களின் வாழ்வில் துன்பத்திற்கு காரணமாயுள்ள ஆணவ மலத்தின் சக்தியிலிருந்து இறைவன் உயிர்களை காப்பாற்ற உயிர்கள் மீதுள்ள கருணையின் விளைவாக கன்மம், மாயை போன்ற மலங்களைச் சேர்த்து காப்பாற்றும் நிலையில் காணப்படுகிறான் என சமயம் கூறுகிறது.

எனவே, உயிர்கள் வாழ்வில் அறியாமையின் விளைவாகச் செய்யும் செயல்களே வினையின் காரணமாக பிறவிச் சூழல் என்ற நிலையினை பெற்று தரும் நிலையில் உள்ளன. உயிர்கள் தன்னிலுள்ள உண்மையறிவின் மூலமாக இத்தகைய உலக இன்ப துன்ப நிலைகளில் நாட்டம் கொள்ளாது அதன் விளைவுகளிலிருந்து நீங்கி பிறவிச் சூழல் என்ற நிலையினை கடந்து இன்பமாக வாழ்தல் வேண்டும் என உயிர்கள் மீது கொண்ட கருணையின் விளைவாக இறைவன் உயிர்களின் பக்குவ நிலைகளுக்குத் தகுந்தாற் போல் செயல்படும் நிலையில் காணப்படுகின்றன. மழை பெய்யும் போது பச்சை மண் கலம் கரையும் நிலையில் காணப்பட்டாலும் அம்மண் கலத்தினை சுட்டபின் மழை பெய்யும் நிலையில் கரையாது மழை நீரால் பாதிக்கப்படாது இருப்பது போல உயிர்கள் பொறிகள் மூலம் உலக இன்ப நாட்டங்களில் சிக்கி துன்புறும் நிலையில் பிறவிச் சூழல் என்ற நிலையால் பாதிக்கப்பட்டாலும் இறைவன் அளிக்கும் திருவருள் ஞானத்தின் மூலமாக உலக செயல்பாடுகளின் தன்மைகளின் விளைவுகளால் நிகழும் துன்ப நிலைகளிலிருந்து நீங்கிதன் நிலையில் இன்பமாக காணப்படுகிறது. மேலும் மாசு படிந்த குளத்து நீரில் தேற்றான் கொட்டையினை போடும் நிலையில் குளத்திலுள்ள மாசுகள் யாவும் அடியில் தங்கி குளத்து நீர் சுத்தமாவது போல உயிர்களில் காணப்படும் மாசுகளான மலங்கள் நீங்கும் நிலையில் உயிர்கள் இறைவனின் திருவருள் ஞானத்தினை உருணம் நிலையில் காணப்படுகிறது. இதில் குளத்திலுள்ள கலங்கிய நீர் மலங்களால் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள உயிர்களுக்கும் அதிலுள்ள மாசுகள் உயிர்களில் காணப்படும்.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link