ஆய்வுச் சிந்தனைகள்


தமிழர்தம் அரசியலில் கூட்டுணர்வு - ஓர் அறிமுகம்

பழந்தமிழர்கள் காலத்தையும் உழைப்பையும் இணைத்துச் செயல்களை மேற்கொண்டதனால் பல துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வாழ்ந்து வந்தனர் என்பதற்குக் கல்லணை போன்ற பெரிய அணைக்கட்டுகளும், கட்டடக் கலைகளும், சிற்பக்கலைகளும் சான்று தருகின்றன. இதற்கு மூல வித்தாகத் தனியொருவர் உழைப்பும் காலமும் மட்டும் பயன்தராது என்பதையுணர்ந்து பலரும் ஒன்றிணைந்து கூட்டுணர்வுடன் (Team spirit) வாழத் தலைப்பட்டனர். இதன் விளைவால் பண்டைக் காலத் தமிழர்களில் அரசு, குடும்பம், வாணிபம், இன்ன பிற சமூக நிறுவனங்களின் வாயிலாக மேம்பாடு பெற்றிருந்ததை அறிய முடிகின்றது. தமிழர் தம் அரசியலில், ஆட்சியாளர்களும், புலவர்களும் எங்ஙனம் கூட்டுணர்வாகச் செயல்பட்டனர் என்பதை இலக்கியவழி அறிய முயலுகிறது இக்கட்டுரை.

பண்டைக் காலந் தொட்டே சமுதாயம், தனிமனிதனை அரசாள விட்டதாகத் தெரியவில்லை. ஆட்சித்துறையில் அரசனுக்கு உதவி புரிய அரசியல் மேதைகளும், சான்றோர்களும் இருந்து செயல்பட்டு வந்தனர் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகரும்.

"ஐம்பெருங்குழுவும் எண்பேர் ஆயமும்" சிலம்பு - 26:38)
மேலும், மணிமேகலையில்
"ஐம்பெருங்குழுவும்; என்பேர் ஆயமும்
வற்தொரு குழிஇ" (விழாவரை காதை)

என்ற பாடல் வரிகள் சுட்டுவதன் மூலம், ஐம்பெருங்குழுவும் என்பேராயமும் பற்றிப் பல்வேறுபட்ட உரையாசிரியர்கள் பொருள் கூறினாலும் முடிந்த முடிவாக மன்னனுக்குத் துணையாக இரு பெருங்குழுக்களும் செயல்பட்டு வந்தன என்பதை இரட்டைக் காப்பியங்களின் வழி அறியமுடிகிறது. மேலும் இக்கருத்தை போன்றே மதுரைக் களஞ்சியும்,

"பழையன மோகூ ரவையகம் விளங்க
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன
தாமேஎந் தோன்றிய நாற்பெருங்குழுவும்" மதுரைக்காஞ்சி 508-510

என்று கூறுவதன் மூலம் நாட்டின் அரசாட்சிக்கு இப்பெருங்குழுவினர் சீரிய பணி தெளிவாகிறது. நீதி கூறலோ, சட்டம் இயற்றலோ, வரி விதித்தலோ பிற ஆட்சிப் பணிகளோ எதாயினும் குழுவின் முடிவே பெறப்பட்டது என்பது இதனால் அறிந்து கொள்ளக் கூடிய செய்தியாகும்.

நிர்வாக அமைப்பில் கூட்டுணர்வு

அரசவையில் மன்னன் தானே தனித்து முடிவு எடுக்காமல் ஆட்சிக் குழுக்களின் மூலம் செயலாற்றி வந்ததை இலக்கியங்களின் வழிய அறிய முடிகின்றது. சங்க காலத்தில் அரசியல் நிலைபற்றி நாளும் அரசவையில் கலந்துரையாடுதலை மரபாகக் கொண்டனர். நாட்டில் நல்லமைதியும் அறமும் சிறந்து விளங்குவதற்கு அரசனுக்குத் துணையாக அமைச்சர் குழு செயல்பட்டதனைப் பெரும்பாணாற்றுப் பாடலின் "கொடுமை இல்‘த சுற்றம்" என்ற வரியும் பதிற்றுப்பத்தின் "மனம்பொருந்திய சுற்றம்" என்ற வரியும் சுட்டும். அக்கால ஆட்சிக் குழுக்களின் சிறப்பை இதன்வழி நன்கு உணரமுடிகின்றது.

அமைச்சர்களின் கூட்டுப்பணி

அரசர் அவையில் அமைச்சர்கள் பங்குகொண்டு அரசர்க்கு ஆலோசனைகளைக் கூறுவதோடு மட்டுமல்லாமல் மன்னன் தவறான வழியில் செல்லுவானாயின் தேவையான அறிவுரைகளை எடுத்துக் கூறும் உரிமைகளையும் பெற்றிருந்தனர். இதனால் கூட்டுப் பணியாட்சி சிறப்பிடம் பெற்றது எனலாம். எனவே சிறப்பானதொரு ஆட்சிக்கு, தனியொரு அரசன் மட்டும் பிரதானமாக அமைவதில்லை. ஆட்சிக் குழுக்களும் இடம் பெறுகின்ற கூட்டுப் பணியே சிறப்பான ஆட்சி நடைபெற்றது என அறியலாம்.

நீதி முறையில் கூட்டுணர்வு

பண்டைத் தமிழகத்தில் நீதிமுறையில தனி ஒருவரால் மட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டதாக இலக்கியங்களின் வழி அறியமுடியவில்லை. பலரின் ஒருமித்த உணர்வால் நீதிமுறை இருந்ததனை அறியமுடிகின்றது. சான்றாகப் பெரிய புராணத்தில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சிவபெருமானுக்கும் ஏற்பட்ட வழக்குச் சிக்கலில் ஊர்ச்சபையின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்றும் பல நீதிபதிகள் கொண்ட குழுவால், வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படுவதை நடைமுறையில் காண முடிகின்றது.

புலவர்களின் பணி

நல்லாசாட்சிக்கு ஆட்சிக்குழுக்கள் மட்டும் போதுமானதன்று. அவ்வரசாட்சிக்குப் பின்புலமாகப் புலவர் பெருமக்கள் குழுவும் பங்கு பெற்றிருந்தது என்பதற்கு இலக்கியங்கள் பல சான்று பகரும். புலவர்கள் தமக்குக் கிடைக்கும் பரிசுப் பொருளைப் பிரதானமாகக் கொள்ளாமல் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பிற வளர்ச்சிக்கும் மேற்கொண்ட முயற்சிகள் பலவாம்.

புலவர்களின் ஒற்றுமையுணர்வு

சங்ககாலப் புலவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துணர்வோடு இருந்து வந்ததை இலக்கியங்களின் வழி அறியமுடிகின்றது. சான்றாகப் புறநானூற்றில் கீழ்க்கண்ட பாடலைச் சுட்டலாம்.

"பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
ஓம்பா துண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசீல் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோர் வின்றே" (புறநானூறு 47:4-7)

இளந்தத்தன் என்னும் புலவன், சோழன் நலங்கிள்ளியிடம் வந்தான். சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே முன்பு பகை இருந்தது. அதனால் தன்னிடம் வந்த இளந்தத்தனை நலங்கிள்ளியின் ஒற்றன் என எண்ணிக் கொல்ல முற்பட்டான். இதனை அறிந்த கோவூர் கிழார் கூறிய அறிவுரையால் மன்னன் புலவரைக் கொல்லாமல் விட்டார். இதன் மூலம் அக்காலத்தில் புலவரிடையே ஒற்றுமையுணர்வு மேலோங்கி இருத்தலைக் காணமுடிகின்றது.

அரசர்களிடையே ஒற்றுமையுணர்வு ஏற்படுத்துதல்

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் கூட்டுணர்வாக வாழ வேண்டும் என்பதைப் புலவர்கள் தமது கொள்கையாகக் கொண்டனர். இதனால் போரைத் தவிர்க்கும் முகமாகப் புலவர் மேற்கொண்ட செயல்கள் பலவாம். சான்றாக புறநானூற்றுப் பாடல் ஒன்று

"ஒருவீர் தோற்பினுந் தோற்பது நுங்குடியே
இருவீர் வேற லியற்கையு மன்றோ" (புறம்-45:5-6)

சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் ஏற்பட இருந்ததைத் தவிர்த்து இருவரையும் ஒற்றுமையுணர்வுடன் இருக்கச் செய்தார் என்பதை இதன்மூலம் அறியமுடிகின்றது. மேலும் ஒற்றுமையுணர்வு கருதி போரைத் தவிர்க்கும் பொருட்டுத் தொண்டைமான் என்பவனிடம் ஒளவையார் தூது சென்றமை புறநானூற்றுப் பாடல் மூலம் காணமுடிகின்றது.

புலவர்கள் குழுவாகச் சேர்ந்து இலக்கியப்பணி செய்துவந்தனர் என்பதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணமுடிகின்றது சான்றாகச் சில வருமாறு:

1) "நிலவினாவிற் றிருதருஉ நீண்மாடக் கூடலார்
புலவினாவிற் பிறந்த சொற் புதிதுண்ணும் பொழுதன்றோ" கலிதொகை- 35:17-18

2) "தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன்" மதுரைக்காஞ்சி 761-763

இவர்களின் கூட்டுணர்வுச் செயலை முச்சங்கங்களின் வாயிலாக அறிய முடிகிறது. புலவர்கள் மதுரை மாநகரில் கூடிச் சங்கம்கண்டு மன்னருடன் தமிழ் வளர்த்துள்ளனர். இதன் மூலம் புலவர் பெருமக்கள் ஒன்று கூடிக் கூட்டுணர்வாக இலக்கியத்தை வளர்த்துள்ளனர் என அறிய முடிகிறது.

தமிழர்தம் அரசியல் சீரும் சிறப்புமாக நடைபெற்ற வந்ததற்குப் பல்வேறு ஆட்சி மன்ற குழுக்களின் ஆலோசனைகளும் புலவர்களின் அரிய செயல்களும் காரணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற கூட்டுணர்வுடன் நல்லாட்சி செய்தனர் பழந்தமிழர்கள் என்பதை இலக்கிய வழி அறிய முடிகின்றது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link