ஆய்வுச் சிந்தனைகள்


சங்க இலக்கியம் காட்டும் தலையாலங்கானப் போர்

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் உள்ள ஊர் தலையாலங்காடு. இவ்வூரே தலையாலங்கானப் போர் (கானம்-காடு) நிகழ்ந்த இடம் என அறிய முடிகிறது. சோழ நாட்டில் உள்ள இவ்வூரில் சோழனுடன் சேர்ந்து போரிட்ட சேரனையும், திதியனையும், எழினியையும், எருமையூரனையும், இளங்கோ வேண்மானையும், பொருணனையும் ஒருவனாக நின்று பாண்டியன் நெடுஞ்செழியன் பொரு தோற்றோடச் செய்தான். தலையாலங்கானத்தில் பெற்ற இப்பெரு வெற்றியன் காரணமாகவே இவன் "தலையாலங்கானத்துச் செருவென்ற" பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அடைமொழியுடன் அழைக்கப்படுகிறான்.

இளையோன்

ஏழு மன்னர்களும் ஒருங்குகூடிப் பாண்டியனை வெல்லத் திட்டமிட்டு போர் தொடங்கு முன்னரே ஒற்றர் மூலம் செய்தியறிந்த நெடுஞ்செழியன் தனது பெரும் படையுடன் சென்று பகைவரின் மையமாகிய சோழ நாட்டில் தலையாலங்கானத்தில் பொருதான் என்று அறிகிறோம். அப்போர் புரிந்த வேளையில் அவன் மிகவும் இளையோன் என்பதை இடைக்குன்றூர் கிழார் என்னும் புலவர் பின்வரும் புறப்பாடல் வழியாகத் தெரிவித்துள்ளார்.

"கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண்தளிர்
நெருங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்" (புறம்.77)

என்ற பாடல் நெடுஞ்செழியனின் இளமையையும் பொலிவையும் உணர்த்துகிறது.

"நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளையன் இவன்என உளையக் கூறிப்
... .... ....
படையமை மறவரும் உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை" (புறம்.72)

என்று பாண்டியனே பாடிய வஞ்சினப் பாட்டுமூ அவனை இளையோன் என உணர்த்துவதை அறிய முடிகிறது.

உழிஞைப்போர்

தலையாலங்கானத்துப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் உழிஞைப் பூச்கூடிப் போரிட்டான் என்பதை,

"மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலியச் சூடி" (புறம்.7.6)

என்று இடைக்குன்றூர் கிழார் குறிப்பிட்டுள்ளார். இவ்கைப் போர், பகைவரின் கோட்டையைத் தாக்குவது ஆகும்.

"முடிமிசை உழிஞை சூடி ஒன்னார்
கொடி நுடங்காரெயில் கௌக்கருதின்று" (உழிஞைப்படலம்)

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல், மதிலைக் கைப்பற்ற நடத்தும் போர் உழிஞைப் போர் என்பதை உணர்த்தும்.

இவ்வுழிஞைப் போரில் பாண்டியனுடன் பொருத மன்னனின் பெயர் சேரல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேரல் என்னும் பெயரைக் கொண்டவர்களாக நெடுஞ்சேரலாதன், நார்முடிச் சேரல், அந்துவஞ்சேரல், மாந்தரஞ்சேரல், பெருஞ்சேரல், இளஞ்சேரல் போன்று பல சேர மன்னர்கள் உள்ளனர். இவர்களில் மாந்தரஞ்சேரல் என்னும் மன்னன் தலையாலங்கானத்துப் போரில் பாண்டியனின் சிறைப்பட்டான் என அறிய முடிகிறது. பாண்டியனின் சிறையிலிருந்த மாந்தரஞ்சேரல் தப்பிச் சென்றமையைப் புறப்பாட்டுப் பின்வருமாறு தெரிவிக்கின்றது. "யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் எனச் சுட்டப்படும் அம்மன்னன், குழியில் அகப்பட்ட யானை, குழியைத் தன் கோடுகளால் குத்தித் தூர்த்துக் கொண்டு தப்பிச் சென்றது போல், சிறையிலிருந்து தப்பிச் சென்றான் (புறம்.17) எனக் குறிப்பிடப்ட்டுள்ளமையால் இவனே, தலையாலங்கானத்தில் நெடுஞ்செழியனுடன் பொருதவன் எனக் கொள்ள இயலும்.

தலையாலங்கானத்தில் பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்த சோழ மன்னன், செம்பியன் என்ற குறிப்பைத் தவிர வேறு எதுவும் அறிதற்கில்லை. இவ்விரு பெருவேந்தர் தவிர ஏனைய ஐவரும் வேளிர்கள் என்று அறிகிறோம்.

வீரத்தில் முதிர்ந்தவன்

இளையோனாகிய பாண்டியன் நெடுஞ்—ழியன் வீரத்தில் முதிர்ந்தவன் என்ற கருத்தை இடைக்குன்றூர் கிழார்,

"முதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து
தெண்கிணை முன்னார்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மன்னரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச்சிறிதே!" (புறம்.7.9)

என்ற பாடலில் பகல்நேரம் குறைவாக இருக்கின்ற காரணத்தால் எதிர்த்த ஏழு மன்னர்களில் சிலர் உயிர் தப்பிப் பிழைக்கக் கூடும் என்று பாடியிருப்பது பாண்டியன் இளையோனாயினும் பெருவீரன் என்னும் கருத்தைக் காட்டுவது ஆகும்.

போர்க்களத்தில் ஏழு மன்னர்களையும் நெடுஞ்செழியன் ஒருவனாக நின்று போரிட்டு வென்ற தன்மையை,

நாடுகெழு திருவின் பசும்பூண்செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருதுகளத்து அடலே" (புறம். 7.6)

என்ற புறப்பாட்டு விளக்கும்

கூற்றம் போன்றோன்

தலையாலங்கானத்தில் பாண்டியன் பெற்ற வெற்றியைக் குடபுலவியனார்

"தமிழ்தலை மயங்கிய தலையாலங்கானத்து
மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னோடு தூக்கிய வெல்வேற் செழிய" (புறம்.19)

என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வுலகில் உள்ள உயிர்த் தொகுதி பலவாகும். ஆனால், அவ்வுயிர்களை ஆட்கொள்ளும் கூற்றுவன் ஒருவனே ஆவான். அதைப் போல் எதிரிகள் பலராக இருக்க அவர்களை எதிர்த்து அழித்த நீ கூற்றுவனைப் போல் ஒருவனே என்று குறிப்பிட்டுள்ளார்.

குடபுலவியனார் கூற்றுவனாக நெடுஞ்செழியனைச் சித்தரித்தது போன்றே கல்லாடனாரும்,

"ஆலங்கானத்து அமர்கடந்து அட்ட கால" (புறம்.23)

என்று பாடியுள்ளார்.

தலையானங்கானத்துப் போர்க்களத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவரை வென்று களவேள்வி புரிந்ததை மாங்குடி கிழர்.

"முடித்தலை அடுப்பாகப்
புனல்குருதி உலைக்கொளீ இத்
தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய" (புறம்.26)

என்று பாடியுள்ளார். இக்களவேள்வியை மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,

"ஆண்டலை அணங்கடுப்பின்
வயவேந்தர் ஒண்குருதி
சினத்தீயிற் பெயர்பு பொங்கத்
தெறலருங் கடுந்துப்பின்
விறல் விளங்கிய விழுச்சூர்ப்பின்
தொடித்தோட்கை துடுப்பாக
ஆடுற்ற ஊன்சோறு" (வரி 29-35)

என்று பாடியுள்ளார்.

தலையாலங்கானப் போரில் பகைவர்களை வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அவர்களது நாடு அழியும்படியாக விரைந்து சென்று எரியூட்டியமையை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில்,

"கால் என்னக் கடிதுராஅய்
நாடு கெட எரிபரப்பி
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
அரசு படஅமர் உழக்கி
முரசு கொண்டு களம்வேட்ட
அடுதிறல் உயர் புகழ் வேந்தே!" (125-130)

என்று பாடியுள்ளார். பாண்டியனின் யானைகள் தாமே கம்பத்தை அறுத்துச் சென்று பகைவரின் நீர்நிலைகளை அழித்தன என்பதைக் கல்லாடனார்.

"வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்" (புறம்.23) என்று குறிப்பிட்டுள்ளார்.

தலையாலங்கானத்துப் போர்க்களத்தில் நெடுஞ்செழியன் எழுவரை வெற்றி கொண்டது கண்ட வீரர்கள் ஆர்ப்பரித்த தன்மையை அகநானூற்றில்,

"கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன்தலை சிவப்ப
சேரல், செம்பியன், சினம் கெழுதிதயன்
போர்வல் யானைப் பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன் என்று
எழுவர் நல்வலம் அடங்க ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரைசெல
கொன்று, களம் வேட்டாஞான்றை,
வென்றி கொள்வீரர் ஆர்ப்பினும் பெரிதே!" (அகம்.36) என்று நக்கீரர் பாடியுள்ளார்.

வீரர்க்குப் பரிசில்

தலையாலங்கானத்துப் போரில் வெற்றிபெற்ற நெடுஞ்செழியன் தனது வெற்றிக்குக் காரணமான வீரர்களை அழைத்துப் பரிசில் வழங்கிச் சிறப்பித்தமையை மதுரைக் காஞ்சி தெரிவித்துள்ளது.

முற்ற வளைந்த வில்லினின்றும் புறப்பட்டு விசைகொண்டு வரும் அம்பைத் தாக்க வல்ல அகன்ற மார்பினையும், குதிரைகளை விரைந்து செலுத்தவும், வேண்டும்போது அவற்றை நிறுத்தவும் வல்ல பருத்த தோளினையும் கொண்ட வீரர்களே வருக!

கல்லை இடித்துச் செய்த சுருங்கிய நீரவரும் வாயையுடைய முழுமுதல் அரணில் நின்று வருந்திய மறச் செல்வர்களே வருக! நெருப்பு நிமிர்ந்தாற்போன்ற பகைவர் படையின் நடுவே சென்று பெரிய களிற்றி யானைகளை வெட்டிக் கொன்று விழுப்புண் பட்ட வீரர்களே வருக!

பகைவர் முற்றியிருக்க, அரணகத்தே ஆற்றல் அழிந்து இருந்தவர்க்கு துணை செய்தற்பொருட்டு நம்மால் ஏவப்பெற்றுப் பகைவர்தம் அம்பும் வேலும் அளவற்றன வந்து தைக்கப் பெற்றமையான் கவசமும் உடலும் ஒருங்கு அழிய ஆருக்கால் தைக்கப்பெற்ற குடம் போலும் மார்பினராய மாவீரர்களே வருக!

மாலை சூடிச் சந்தனம் பூசிப் போர்க்களம் புகுந்து பகைவர் தம் பெரிய யானைப் படையினைக் கைப்பற்றி மீண்ட திருவோர்களே வருக!

இவர்களைப் போன்ற ஏனைய வீரர்களே வருக!
"யாவரும் வருக ஏனோரும் தம்மென
வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக" (மதுரைக் காஞ்சி, வரி, 724-750)

என்று அழைத்துப் பல்வேறு பரிசில்கள் வழங்கியுள்ளமை€யை காணமுடிகிறது.

புண்பட்ட வீரர்

நெடுஞ்செழியனின் நெஞ்சம் போர் வெற்றியால் மகிழ்ந்தாலும் போரில் புண்பட்ட வீரர்களை எண்ணி வருந்தியது. எனவே, பாசறையில் புண்பட்டுக் கிடந்த வீரர்களைக் கண்டு ஆறுதல் கூறச் செல்கிறான். இக்காட்சியை நெடுநல்வாடையில் நக்கீரர்,

"களிறு களம்படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து" (வரி,171-172) என்று குறிப்பிட்டுள்ளார்.

தலையாலங்கானப் போரில் ஈடுபட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் மிகவும் இளையோனாக இருந்தான். அவன்புரிந்த அப்போர் உழிஞைப்போர். இளையோனாக இருந்தாலும் அவன் வீரத்தில் முதிர்ந்தவன். அவன் எதிரிகளுக்குக் கூற்றம் போன்றவன். அவன் போர்க்களத்தில் களவேள்வி செய்தான், பகைவர் நாட்டை எரியூட்டினான், நீர்நிலைகளை அழித்தான், அவன் போர் வீரர்களுக்குப் பரிசில் வழங்கினான், புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் வழங்கினான் போன்ற செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link