ஆய்வுச் சிந்தனைகள்


இயற்பெயரும் சுட்டுப் பெயரும்

பெயர்கள் பல வகைகளாக அமைகின்றன. தொடக்க காலங்களில் செயற்கையோடு தொடர்புடைய பெயர்களையே பொது நிலையின் எல்லாவற்றிற்கும் அமைத்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்கள் மலர்களின் அடிப்படையில் தோன்றிய நிலப்பெயர்கள். ஆங்கிலேயன், அமெரிக்கன், ஜப்பானியன், ஜெர்மானியன் போன்றவையும் நிலப்பெயர்கள் தாம். அந்தந்த நாட்டில் தோன்றியவனை அவை குறிக்கின்றன. அவை மொழியோடு இணைந்தும் அமையலாம். நம் உரையாசிரியகள் பழங்காலத்தில் காட்டிய எடுத்துக்காட்டுக்கள், சோனாட்டான், மதுரையான் போன்றவை. நிலைப்பெயர் முழுவதும் உலகப் பொதுப்பெயரே.

குடிப்பெயராகச் சேரன், சோழன், பாண்டியனை முன்பு காட்டினர். மேல்நாட்டு வழக்குகளில் தாமஸ், பீட்டர், ஜேம்ஸ் போன்ற குடிப்பெயர்களாக இன்றும் அமைந்துள்ளன. காப்பியக்குடியில் தோன்றியவர்கள் தான் தொல்காப்பியர், காப்பியாற்றுக் காப்பியனார் போன்றோர்.

குழுவின் பெயராக சங்கத்தான், அவையத்தான் போன்றவற்றைக் காட்டுவர். புலவர் குழு உறுப்னினைப் புலவர் என்றழைக்கின்றோம். அது குழுவின் பெயர்தான். கழகத்தான், காங்கிரஸ் காரன், போன்ற கட்சிகளால் அமையும் பெயர்களும் குழுவின் பெயர்களே. ஒவ்வொரு நாட்டிலும் குழுக்கள் இருக்கின்றன. குழுப்பெயரும் உலகப் பொதுப் பெயர்தான்.

வினைப்பெயர், செய்யும் செயலைப் பொருத்தி அமையும் பெயர்கள். தச்சன், பொன் கொல்லன், கொல்லன் போன்ற பெயர்கள். உலகம் முழுவதும் மரவேலை செய்பவன் தச்சன்தான். ஆங்கிலத்தில் carpenter என்றழைக்கின்றோம். இது உலகம் முழுவதும் விளங்கும் புரியும் வினைப்பெயரே.

செல்வந்தன், பணக்காரன், ஏழை, போன்ற பெயர்கள் உடைப்பெயர்கள் உடைமையை உணர்த்துகின்றன. ஏழ்மையையுடையவன் ஏழை. செல்வத்தை உடையவன் செல்வந்தன். உடைப்பெயருமூ உலகப் பொதுப் பெயரே.

கறுப்பன், செள்ளையன் என்ற நிறப்பெயரால் இன்று உலகம் முழுவதும் மக்களை அழைக்கின்றனர். நல்லன், தீயன் போன்றவையும் உலகப் பொதுப் பெயர்தான்.

முறைப்பெயர்களும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி போன்றவையும் உலகம் முழுவதும் ஒன்று தான். மொழிக்குத்தக்கச் சொற்கள் வேறுபடலாம்.

பெயர் என்ற இலக்கண அமைப்பு உலக மொழிகள் அனைத்திலும் உள்ள ஒரு அமைப்பு. தமிழகத்தில் தாமரை, கமலம், அம்புயம் போன்ற பெயர்கள் அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். வேம்பு, பனையப்பன், அரசப்பன், போன்ற மரப்பெயர்களையும் இயற்பெயர்களாக வைக்கின்றனர். உலகம் முழுவதும் மனிதர்க்குப் பெயர் வைப்பதில் கூட ஒரு பொதுப்பண்பு அமைகின்றது.

குருடர், செவிடர், பெருங்காலன், சிறுகண்ணன் போன்ற உறுப்படிப் பெயர்களும் உலகம் முழுவதும் உள்ளன.

ஐந்நில ஒழுக்க அடிப்படையில் மலையன், காடன், மேய்ப்பன், இடையன், பரதவன், நிலக்கிழார் போன்ற பெயர்களும் உள்ளன.

இன்றும் விளையாடுவோர் தம் குழுவுக்குத் தனிப்பெயர் அமைப்பதை உலகம் முழுவதும் பார்க்கிறோம். செவ்வணியார், வெள்ளணியார், Red house, blue house, white house போன்ற பெயர்கள் உள்ளன.

மூவர் என்றால் சேர, சோழ, பாண்டியரைக் குறிக்கின்றது. நூற்றுவர் என்றால் துரியோதனன் அவன் சகோதரரைக் குறிக்கும். ஐவர் என்றால் பாண்டவரைக் குறிக்கும். இவை எண்ணால் இயன்ற பெயர்கள்.

நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே
வினைப்பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயரே,
பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே
பல்லோர் குறித்த திணை நிலைப் பெயரே,
கூடி வரும் வழக்கின் ஆடியல் பெயரே
இன்றியவர் என்னும் எண்ணியல் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றில் பினவே (தொல் - 650)

இப்பெயர் வகைகள் போன்று, இன்னும் பல பெயர் வகைகளைத் தொல்காப்பியம் குறிக்கின்றது. இவை அனைத்தும் உலகப் பொதுப் பெயர்கள் தாம்.

உலகம் முழுவதிலும் எல்லா மொழிகளிலும் இயற்பெயர்களும் (Nouns) சுட்டுப் பெயர்களும் (pronoun) உள்ளன. கண்ணன், வேலன், தமிழரசி, தாமரை போன்றவை இயற்பெயர்கள். அவன், இவன் போன்றன சுட்டுப் பெயர்கள். எல்லா மொழி இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும், இயற்பெயரை முதலில் சொல்லாது சுட்டுப் பெயரை முதலில் கூறிப் பின்பு செய்திகளைத் தொடங்கினால் படிப்போனுக்குத் தெளிவுக் கிடைக்காது. மயக்கம் ஏற்படும். சிறுகதை, புதினம், கவிதை, போன்ற எந்த வகை உலக இலக்கியமாயினும் முதலில் இயற்பெயரைக் கூறிப்பின்பு தான் சுட்டுப் பெயரைக் கூற வேண்டும். அதுதான் பொருத்தமாக அமையும். இது உலக மொழிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதைத் தொல்காப்பியம் கி.மு.வில் கூறியுள்ளது.

இயற்பெயர் கிளவியும், சுட்டுப் பெயர்க்கிளவியும்
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின
சுட்டுப் பெயர்க் கிளவி முற்படக் கிளவார்
இயற்பெயர் வழிய என்மனார் புலவர் (தொல் - 521)

என்பது நூற்பா. இங்கு என்மனார் புலவர் என்ற தொடர் இது மரபு மரபாக, வழி வழியாக வந்த செய்தி என்பதை உணர்த்துகிறது. இப்பார்வை தமிழ்ப் பார்வை மட்டும் இல்லை. உலகப் பொதுப்பார்வை, தொல்காப்பிய இலக்கணம், தமிழ் மொழி வழியாக உலக இலக்கணத்தை, உலகப் பொதுச் செய்திகளைக் கூறுகிறது என்பது தெளிவு வெளிப்படை.

2012 Tamil Rasipalangal Horoscope
Latest Tamil Movies Online Website
Send Greetings in Tamil
Tamilnadu Classifieds - Koodal Business Link