முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » தெறி

Theri Movie Review

தெறி

-

Theri

Tamil Movie - Theri Review - Vijay, Amy Jackson, Samantha,  Tamil Movie Actor, Actress
கடமை தவறாத போலீஸ் அதிகாரியின் கதை, பாசமுள்ள தந்தை மகள் கதை, போலீஸ் ரௌடி பழிவாங்கும் கதை என பல இருந்தல்லும், இது விஜய் ரசிகர்களுக்கான கதை. தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் 59-வது படம், இயக்குநர் மகேந்திரன் வில்லனாக நடிக்கும் முதல் படம். ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகும் 50-வது படம், நடிகை மீனாவின் மகள் நைனிகா நடிக்கும் முதல் படம் என பல சிறப்பு அம்சங்கள் கொண்டது ‘தெறி’.

தன்னுடைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு கேரளாவில் தனது மகள் நைனிகாவுடன் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார் ஜோஸப் குருவில்லா என்னும் விஜய். மகள் நிவேதா (நைனிகா) யு.கே.ஜி. படிக்கிறாள். விஜய் அந்த ஊரிலேயே பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குத் துணையாக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். மகளை எப்போதுமே ஸ்கூலில் லேட்டாக கொண்டு போய் விடுவதே வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய்க்கு பதிலாக ஒருநாள் நைனிகாவை அவளது ஸ்கூல் டீச்சரான எமி ஜாக்சனே தனது ஸ்கூட்டியில் கூட்டிப் போகிறார். போகிற இடத்தில் நைனிகாவுக்கு சிறிய விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் லோக்கல் ரவுடி கும்பலுடன் பிரச்னை ஏற்படுகிறது. மகள் நிவேதாவை அவர்கள் சீண்ட, சீண்டியவர்களை புரட்டியெடுக்கிறார் விஜய். அப்போது தான் அவர் ‘பாட்ஷா’ ரஜினி ஸ்டைலில் ப்ளாஷ்பேக் இருப்பது தெரிய வருகிறது. அமைதியான விஜய்க்குள் இப்படி ஒரு மிருகத்தனமான கோபம் எப்படி என எமி கேட்க, கதை செல்கிறது சில வருடங்களுக்கு முன்னாள்.

ஐ.டி. பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அமைச்சரின் மகனை நேர்மை தவறாத போலீஸ் துணை கமிஷனர் விஜய் பரலோகம் அனுப்பி வைக்கிறார். பதிலுக்கு அமைச்சர் விஜய்யின் மனைவியையும் (சமந்தா) அம்மாவையும் (ராதிகா) கொன்று கணக்கை சமன் செய்கிறார். மனைவிக்குச் செய்த சத்தியத்துக்காக அவர்களிடமிருந்து தப்பித்து , குழந்தையைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று வளர்க்கிறார் ஜோசப் விஜய். ஐந்து வருடங்களுக்கு பிறகு விஜய்யை கண்டுபிடிக்கும் மகேந்திரன் அவரை கொல்லத் துடிக்க, தப்பிக்கும் விஜய் மந்திரி மகேந்திரன் டீம் ஆட்கள் ஒவ்வொருவராக முடித்துகட்டிவிட்டு இறுதியில் மந்திரியுடன் நடக்கும் ஆடுபுலி ஆட்ட மோதல்தான் ‘தெறி’.

விஜய்யின் அறிமுக்க் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவே ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஸ்மார்ட்டான, நேர்மையான, எதற்கும் அஞ்சாத ஒரு உயர் போலிஸ் அதிகாரியாக வருகிறார் விஜய். சுவிங்கம்மை வாயில் போடும் ஸ்டைல், ஜித்து ஜில்லாடியில் டான்ஸ், ஆக்‌ஷன்ஸ், செண்டிமெண்ட், காமெடி என எல்லா சீன்களில் விஜய் மின்னுகிறார். குழந்தையுடன் பாசத்தை காட்டும் தந்தையாக வருவதிலும், ராதிகாவிற்கு நல்ல ஒரு மகனாக வருவதிலும், சமந்தாவுடன் காதல் காட்சிகளிலும், மனைவி மீது பாசம் காட்டுவதிலும் தன் நடிப்பினை செவ்வென பூர்த்தி செய்திருக்கிறார் விஜய்.

விஜய்க்கு பின்பு பெரிய அளவுக்கு ஸ்கோர் செய்திருப்பது குழந்தை நட்சத்திரமான நைனிகாதான். விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. நைனிகாவுக்கும் விஜய்க்கும் உண்டான பாசத்தை இதில் அழகாகவே காட்டியிருக்கிறார்கள்.

முதல் நாயகி சமந்தா, விஜய் ஜோடியாக, காதலியாக மனைவியாக, டாக்டராக கலக்கல். அவரது நடை, உடை, பாவனை கச்சிதம். சமந்தா இந்தப் படத்தில் இன்னும் அழகு. நடிப்பும் தான். பார்த்ததும் காதல் வந்ததற்கு அவர் சொல்லும் காரணம் தனிஅழகு. அப்பாவின் கட்டாயத்துக்காக மறந்து விடுவோம் என்று சொல்லி விட்டு மறுகணமே வந்து விஜய்யை தாவியணைப்பது காதலை கவுரவிக்கும் இடம்.

நைனிகாவின் பள்ளி டீச்சராக எமி ஜாக்சன் வித்தியாசமான கெட்டப்புடன் கிடைத்த கொஞ்ச நேரத்திலும் கதாபாத்திரத்துக்கான தேவையை நிரப்புகிறார்.

இயக்குனர் மகேந்திரனின் நடிப்பு அருமை, அருமை, அருமை. வில்லன் கதாபாத்திரத்தில் வரும் மகேந்திரன், மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். தனது அரசியல்தனம் வாய்ந்த குணத்துடன் ஒவ்வொரு முறையும் வசனங்கள் பேசும்போது கையை ஆட்டிக்கொண்டே பேசுவது படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த்து. சிம்பிளான வில்லனாக வந்தாலும் ஆழமாக மனதில் பதிகிறார். அவர் பேசும் ஸ்டைலும், டயலாக் டெலிவரியும் மகேந்திரன் என்றொரு நடிகரையும் நமக்குக் கொடுத்திருக்கிறது

சுனைனா, பிரபு, ராதிகா, காளி - வெங்கட், அழகம்பெருமாள், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிற பாத்திரங்களும் கச்சிதம். 'நான் கடவுள்' ராஜேந்திரன் குணச்சித்ர நடிப்பு பேஷ், பேஷ்!. 'நான் நர்ஸ் இல்லை டாக்டர்' என்று சொல்லும் சமந்தாவிடம், 'நான் மொட்டை இல்லை. கான்ஸ்டபிள்' என்று பன்ச் பேசி கைதட்டல் வாங்குகிறார். 'ஐ யம் வெயிட்டிங்' என்று விஜய்யிடம் சொல்லி சிரிப்பை வரவழைக்கிறார். அதிலும், செம சிரிப்பு மூட்டும் வெறும் கமெடியனாக மட்டுமில்லாமல் படத்தை இன்டர்வெல் வரை எமோஷனலாக கொண்டு செல்லும் ராஜேந்திரன்.

ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய 50-வது படத்தை சொல்லிக்கொள்ளும்படியாக அமைத்துக்கொண்டார்.  பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
நடிப்பு: விஜய், நைனிகா, மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு
இயக்குனர்: அட்லீ
தயாரிப்பாளர்: கலைப்புலி எசு. தாணு
இசையமைப்பு: ஜி. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்
படத்தொகுப்பு: ஆண்டனி எல். ரூபன்
கலையகம்: வி. கிரியேசன்சு
Your Ad Here
Site Meter