
வெளிநாட்டு பெண்களை மணந்து வெளிநாட்டில் குடிபுகுவதை லட்சியமாக கொண்டு, வாழும் மூன்று கிராமத்து இளைஞர்களின் கதை.
மதுரைக்குப் பக்கத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் உதவாக்கரைகளாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரேம்ஜி, ஜெய், வைபவ் மூவரும் தங்கள் கட்டுப்பாடு மிக்க கிராமத்திலிருந்து ஒரு வாரம் தப்பிக்க விரும்புகிறார்கள். மதுரைக்குப் போகும் அவர்களுக்கு பழைய நண்பனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
நண்பனோ, கோவாவில் கைடாக வேலை பார்த்து, அப்படியே ஒரு வெளிநாட்டு பெண்ணை மடக்கி திருமணம் செய்து லண்டனில் செட்டிலாகப் போகும் தன் கதையை விலாவாரியாகச் சொல்ல, இதுதாண்டா சரியான வழி என்ற முடிவுக்கு வருகிறார்கள் பிரேம்ஜியும் அவரது நண்பர்களும்.
உடனே கோவாவுக்குப் போகிறார்கள். பெண்களை மடக்குவது எப்படியென்று ஒரு புத்தகமே எழுதுமளவுக்கு சுற்றுகிறார்கள். இந்த கும்பலில் ஹோமோவாக திரியும் சம்பத்-அரவிந்த் ஆகாஷ் மற்றும் ஸ்னேகாவின் கிளைக்கதைகள் வேறு...
கோவா சென்ற மூவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையையும், துணையையும் தேடிப்பிடித்தார்களா, இல்லையா? என்பது பிற்பாதிகதை!
ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் இவர்களது கோவா தோழர் அரவிந்த் ஆகாஷ் என நான்கு நாயகர்களும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர் என்றாலும் பிரேம்ஜி அடிக்கடி குளோஸ் அப்பில் வந்து நம்மை பயமுறுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.
முதல் அரை மணிநேரம் கிராமிய இசையும், கல கல காட்சிகளுமா... செல்லும் கதை கோவா பறந்ததும் அரைகுறை இளசுகளின் ஆட்டம் பாட்டமாக இளமை ஊஞ்சாலாடுகிறது. வெள்ளைக்கார பெண்களை மூவரும் கவுத்துவதிலேயே காட்சிகள் நகர்வது சலிப்பு. சம்பத்துக்கும் பிரேம்ஜிக்கும் தவறான உறவு என அரவிந்த் ஆகாஷ் அர்த்தம் கற்பிப்பது தமாஷாக இருந்தாலும் இன்னொரு புறம் முகம் சுளிக்க வைக்கிறது.
பியா, மிலானி, இருவரும் ஏதோ நடித்திருக்கின்றனர். அதிலும் பியாவை அந்த வெள்ளைக்கார மிலானி ஓவர் டேக் செய்து விடுகிறார் என்றால், இவர்கள் இருவரையும் நடிகர் சம்பத் பின்னுக்கு தள்ளி சபாஷ் வாங்குகிறார்!
ஜெய்-பியா காதலை ரசிக்கலாம். பிரேம்ஜி-மிலானி சந்திப்பும் "கண்கள் இரண்டால்" பாடல் பின்னணியில் பூக்கும் காதல் உணர்வுகளும் கலகலப்பானவை...
சினேகாவா இது... நம்ப முடியவில்லை. அவ்வளவு மோசமாக சித்தரிப்பு.. உருவமும் சரி, நடிப்பும் சரி! இந்த மாதிரியான கதாபாத்திரங்களினால் சினேகாவுக்கு இருக்கிற கொஞ்சநஞ்ச இமேஜும் டேமேஜ் ஆகும் என்பதில் சந்தேகமேயில்லை!
பிரசன்னா, சிம்பு இன்ப அதிர்ச்சியை தருகிறார்கள் ரசிகர்களுக்கு. இவர்களைப் போலவே நயன்தாராவும் ஒரு காட்சியில் வந்து கலக்கியிருக்கிறார்!
நகைச்சுவையோடு திகில், திருப்பங்களுடன் திரைக்கதை நகர்ந்திருந்தால் விறுவிறுப்பு ஏறி இருக்கும்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இனிமையான பாடல்கள். குறிப்பாக கோவா தீம் மியூசிக். சக்தி சரவணனின் கேமரா கோவா அழகை அப்படியே அள்ளி இறைத்திருக்கிறது.
ஹோமோ செக்ஸ்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து மெயின் கதையை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பதை சொல்லியே ஆகவேண்டும். லாஜிக்குன்னு ஒண்ணு இருப்பதே இயக்குனருக்கு தெரியாதா? படத்தில் லாஜிக்கை மீறும் விஷயங்கள் ஏராளம்!
சென்னை-28, சரோஜா என நல்ல படங்களை தந்த வெங்கட்பிரபுவுக்கு என்னாச்சு? தெளிவான கதையில் புரியாத பல விஷயங்களை... செலுத்தி ரசிகர்களை கடுப்படுக்கிறார். மொத்தத்தில் கோவா பிரேம்ஜியின் நக்கல் நையாண்டி படம்.