முதல் பக்கம் » சினிமா » திரைமுன்னோட்டம்

Latest Tamil Movie Previews

21 Apr 2012

ஏ.கே.எஸ்.மணியாதவ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம், 'விபுணன்'. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீவிரவாதிகளையும், அராஜகம் புரியும் அரசியல்வாதிகளையும் எதிர்த்து போராடுகிற ஒரு வீரதீர இளைஞனை பற்றிய கதை இது. சஞ்சய்-வாசுகி கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாக, 'மகாநதி' சங்கர், முத்துக்காளை, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஏ.எம். அருண் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்கப் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம்- டைரக்ஷன்: எஸ்.கார்த்திக்கேயன். தயாரிப்பு: ஏ.கே.சுப்பிரமணி. முதல்கட்ட படப்பிடிப்பு திருத்தணி, சித்தூர், பெங்களூர் நெடுஞ்சாலைகளில் நடைபெற்றது.

21 Apr 2012

ஒரு தனியார் தொலைக்காட்சி 'உண்மை' என்ற பெயரில் நடந்தது நடந்தபடி, உண்மையை வெளியுலகத்துக்கு காட்டும் நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக ஒரு இளைஞர்கள் குழு, ஒத்தக்குதிரை என்ற கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதை அவர்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்கும்போது, ஒருவர் பின் ஒருவராக கொலை செய்யப்படுகிறார்கள். முகம் தெரியாத அந்த மர்ம கொலையாளி யார்? என்பதை கருவாக வைத்து, 'ஒத்தக்குதிரை' படம் தயாராகிறது. புதுமுகங்கள் திரு-அனுகிருஷ்ணா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாக, சந்தானபாரதி, 'காதல்' சரவணன் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். ஒளிப்பதிவு: அகர், இசை: எஸ்.என்.அருணகிரி. கதை-திரைக்கதையை திரு எழுத, சக்திவேலன் வசனம் எழுதியிருக்கிறார். ஜே.சீனிவாசன் டைரக்டு செய்துள்ளார். இவர் பாக்யராஜ், கவிகாளிதாஸ் ஆகிய டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த திகில் படத்தை ஓம் மீடியாஸ் தயாரிக்கிறது. சந்தன வீரப்பன் உலவிய அந்தினிர், பர்கூர் மற்றும் மைசூர் காடுகளில், படம் 30 நாட்களில் வளர்ந்து இருக்கிறது.

21 Apr 2012

உலகமே மழைப்பொழிவை மெல்ல மெல்ல இழந்து வரும் வேளையில், தமிழகம் தன் குறைந்தபட்ச தண்ணீர் தேவைக்காக, பக்கத்து மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. இதை கருவாக வைத்து, 'ஒண்டிப்புலி' என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கதைப்படி, முல்லைப்பெரியார் அணையை கட்டிய பென்னி குயிக்கின் பேத்தி தமிழ்நாட்டுக்கு வருவது போலவும், அவர் இங்கே ஒரு இளைஞர் மீது காதல்வசப்படுவது போலவும் காட்சிகள் வருகின்றன. பென்னி குயிக் பேத்தியின் காதலுக்காக, கவிஞர் வைரமுத்து ஒரு வசீகரமான பாடலை எழுதியிருக்கிறார். இதுதவிர, இந்த படத்துக்காக மேலும் 4 பாடல்களையும் அவர் எழுதியிருக்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்டு செய்கிறார், பி.ராஜகுரு. ஒளிப்பதிவு, விஜய் ஆம்ஸ்ட்ராங்க். படத்தின் 80 சதவீத காட்சிகள் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்தில் செல்வின் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த எலீனா ஹசன் நடித்து வருகிறார். இவர்களுடன் பொன்வண்ணன், ஜி.எம்.குமார், செவ்வாழை ராஜ், பருத்தி வீரன் சுஜாதா, பிரகதீஸ்வரன், வடிவேல் கணேசன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

21 Apr 2012

நான்கு நண்பர்களுக்கு இடையே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்த விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்ஜேஷ்வரன் மற்றும் 3 புதுமுகங்களும் நடிக்கிறார்கள். பெங்களூர் அழகி காயத்ரி, கதாநாயகியாக நடிக்கிறார். இவர், 'ரேனிகுண்டா', '18 வயசு', 'பொன் மாலைப்பொழுது' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். திரைப்பட கல்லூரி மாணவரான பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். இவர், 2 குறும்படங்களை டைரக்டு செய்தவர். 'வர்ணம்', 'ஏன் இப்படி மயக்கினாய்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இந்த படத்தில் வேத்சங்கர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். தேசிய விருது பெற்ற 'பசங்க' படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ விஷன் புரொடக்ஷன் சார்பில் வி.எஸ். ராஜ்குமார், இந்த படத்தை தயாரிக்கிறார்.

21 Apr 2012

கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை- இணை இயக்குநராகவும், ரஜினிகாந்த்-கமல்ஹாசன் படங்களில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவருமான ஆர்.என்.குமரேசன், தனது பெயரை ஆர்.என்.கே. என்று சுருக்கிக்கொண்டு, ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் பெயர், 'முழக்கம்.' "முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படம், சமூக அநீதிகளுக்கு எதிரான முழக்கமாகவும், உண்மையான காதலர்களுக்கு ஆதரவான முழக்கமாகவும் இருக்கும்" என்கிறார், ஆர்.என்.கே. சவுந்தர்யன் இசையமைக்கிறார். ஆர்.ஆர்.சரவணா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.கே.மீடியாஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு: சிவபிரகாஷ். படப்பிடிப்பு சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. சில முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

Your Ad Here
Site Meter