முதல் பக்கம் » சினிமா » திரைமுன்னோட்டம்

Kurunila Mannan Tamil Movie Preview

குறுநில மன்னன்

 (

Kurunila Mannan

)

காதலே இல்லாமல், ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "குறுநில மன்னன்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. காதலை மட்டுமல்ல, வேறு எந்த செயற்கை பூச்சும் சேர்க்காத மண்ணின் மனிதர்களின் கதை இது. நகப்பூச்சு, முகப்பூச்சு தொடங்கி, இதயத்துக்கே செயற்கை முலாம் பூசும் எந்திர வாழ்க்கை மனிதர்களிடம் இருந்து விலகி நிற்கிறது, இந்த கதை. மண்ணின் மைந்தர்களாக, வெள்ளந்தியாக வாழும் கரிசல் காட்டு வெள்ளை மனிதர்கள்தான் கதையின் நாயகர்கள். மனதளவில் ராஜாவாக, சுற்றத்தை ஒரு ராஜ்ஜியமாக நினைத்து வாழும் ஒருவனின் கதைதான் படம். செயற்கை உரம் போட்டால் மண்ணின் விளைச்சல் அதிகமாகலாம். ஆனால் வீரியம் கெட்டு விடும். அதுபோலவே இந்த கதைக்கு நட்சத்திரங்களின் துணை தேடினால், மண்வாசனையின் இயல்பு கெட்டுவிடக்கூடும் என்று கருதி, முழுக்க முழுக்க புதுமுகங்களை நடிக்கவைத்து இருக்கிறார்கள். கதாநாயகனாக பிரதீப் அறிமுகமாகிறார். இவர், இசையருவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். படத்துக்காக கூத்துப்பட்டறையில் 2 மாதங்கள் பயிற்சி பெற்று நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். இவர், "ஆறாம் வனம்" என்ற படத்தில் நடித்துக்கொண்டிருப்பவர். "பசங்க" படத்தில் அண்ணியாக நடித்த செந்தி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வில்லனாக, கூத்துப்பட்டறையை சேர்ந்த ஜெகத் நடிக்கிறார். கதையில் வரும் மெய்யர், சொக்கர், சேவாயி, மலர்க்கொடி, கொட்டாணி ஆகிய பாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக அந்த மண்ணில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். மருதுபாண்டியர் வாழ்ந்த மண்ணில் நடக்கும் கதை என்பதால் மருதுபாண்டியர் பற்றி ஒரு கூத்தாடும் கலைஞர் கதை சொல்வதாக ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்தப் பாடலின் ஆரம்ப வரிகள்:- மருதுபாண்டி வீரத்தோட கதையைக் கொஞ்சம் கேளுங்க, பெரிய மருது சின்ன மருது அண்ணன் தம்பி தானுங்க! முன்னவரோ வேட்டையில் வேங்கை புலிதானுங்க, பின்னவரோ நாட்டையாளும் சூரப்புலிதானுங்க! இந்த பாடலை கவிஞர் நா.முத்துகுமார் எழுதியுள்ளார். ஜோஹன் இசையமைக்கிறார். கவிஞர் அறிவுமதியின் மகள் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு: பிரபாகரன், கலை: ராஜா, சண்டை: ஃபயர் கார்த்திக், கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: ர.முருகையா. தயாரிப்பு: நிஷா கென்னடி. காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள வெற்றியூர், கல்லல், காளையார் கோயில், வேப்பங்குளம், தேவகோட்டை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

Site Meter