முதல் பக்கம் » நூல் மதிப்பு

தமிழ் நூல்கள்,புத்தகங்கள்

-

Tamil Books Specials

உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி (ஈழத்துச் சிறுகதைகள்)

Udaintha Kannadikalil Marainthirukkum Kuruvi (Ezhathu Chirukadhaikal)
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310
பக்கங்கள்: 207
விலை: ரூ. 130

அன்பும் தோல்வியும் வெடிப்பும் விரிசலும் ஏமாற்றமும் துரோகமும் சிதைவும் இசையும் கொண்டதாகவே வாழ்வு இருக்கின்றது - அனார்

வாழ்க்கையால் எழுத்தை அர்த்தப்படுத்திக்கொள்வதும் எழுத்தால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதும் நேர்மை மிக்க எழுத்தாளர்களின் முக்கியப் பணியாக அமைந்து வந்திருக்கிறது. திட்டமிடல்களால் உருவாகக்கூடியதன்று இலக்கியச் செயற்பாடு. ஓர் எழுத்தாளனுக்குள் இயல்பாகவே அது உருவாகி இருக்கக்கூடியது. வெறும் கனவுகளில் மாத்திரம் மிதக்கின்ற எழுத்து வகைகளுக்கும் வாழ்வைப் படைத்தளிக்கின்ற இலக்கியத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே எழுத்துப் பணியின் சாரங்களில் ரசனை நுகர்ச்சியாக ஒன்றும் உன்னதமான நீடித்த அனுபவச் சாரம் மற்றொன்றுமாக நம்மிடையே எஞ்சுகின்றன.

அனுபவங்களிலிருந்து தோன்றுகின்ற படைப்புகளே நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. பதிவாகவும் பின் வரலாறுகளாகவும் மாறுகின்றன. காலத்தின் சாட்சியாகவும் தோன்றி நிலைக்கின்றன. உண்மையினது அசல் பிரதிகள் என்பவையின் உயிர்ப்பான உலகம் காலத்தைச் சுற்றி வருகின்ற மங்காத சூரிய ஒளியாக என்றுமிருக்கும். அது பிரிக்க முடியாமல் எம்முடனேயே இறுகிவிடும். எழுத்தாளன் பிரதிபலிப்பாளனாக இருக்கின்றான். வாசகர்களைக் கற்றுக்கொள்பவர்களாக மாற்றுகின்றான் அல்லது அதற்குத் தூண்டுகிறான்.
உணர்வு என்பது அறிவை முந்திக்கொண்டு பீறிடுகின்றது. அறபாத்தின் நோக்கம் மனிதர்களை நோக்கி உயர்ந்துள்ளது. அவருடைய உணர்வுகளே முதலில் முந்திக்கொள்வதை, அவரது கதைகள் காட்டி நிற்கின்றன. என்னைப் பொறுத்தவரை மனிதர்களுடைய அந்தரங்கத்தை, மனச்சாட்சியைப் பிறாண்டிக்கொண்டிருக்கக் கூடிய கூர்விரல்கள் அவரது எழுத்துக்களுக்கிருக்கின்றன. அவருக்கு எதைச் சொல்ல வேண்டும் எவ்விதம் சொல்ல வேண்டும் எனத் தெளிவாகத் தெரிகின்றது. அத்தகைய எழுத்து வடிவங்களின் வெவ்வேறு மாதிரிகள் இத் தொகுப்பில் உள்ளன. அவரது அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் ஆகிய கண்ணோட்டங்கள் தனித்தனியாக, அதனதன் தனித்தன்மைகள் மற்றும் தெளிவுகளோடு அமைந்துள்ளன. அதுவே எழுத்தின் மிகச் சரியான, வலுவான தருணம்.

அறபாத்தின் எழுத்துக்கள் அவரை நிறுத்தியிருக்கும் இந்தப் பருவகாலம் மிகுந்த அழகான கார்காலம் என நான் நினைக்கின்றேன். எழுத்துச் செயற்பாட்டின் மிக முக்கியத் தருணங்களை அவர் தவறவிடாமல் அவற்றை முறையாகக் கையாண்டுமிருக்கின்றார். சகமனிதனையும் அவனது மன அடுக்குகளையும் துல்லியமாகப் பார்க்கத் தெரிந்து வைத்திருக்கின்றார். மனித மனத்தின் அனைத்து விவகாரங்களும் அதன் கவர்ச்சியான லயங்களும் அறபாத்தின் எழுத்துக்களில் ஆரவாரமில்லாமல் வந்து அமர்ந்துள்ளன. எப்போதும் தனக்கு இசைவான செல்லப் பிராணியைப் போல் கதைகளை அவர் வளர்க்கின்ற அல்லது பராமரிக்கின்ற பக்குவம், அதன் கலைத்தன்மை பாராட்டத் தகுந்தது.

சமூகத்தின் நிறைவு அதன் திருப்தி என்பது தனிமனித வாழ்வின் அமைதியில்தான் தொடங்குகின்றது. ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு உலகம். அன்பும் தோல்வியும் வெடிப்பும் விரிசலும் ஏமாற்றமும் துரோகமும் சிதைவும் இசையும் கொண்டதாகவே வாழ்வு இருக்கின்றது.

இங்கு ஓர் எழுத்தாளனின் பணி தீர்வு சொல்வதல்ல, யாருக்கு எதை உணர்த்த முடியுமோ அதை உணர்த்துவது. மேலும் ஒருபடி உயர்ந்து "தீமை எங்கே தொடங்குகின்றது?" என்ற கேள்வியைக் கேட்பது. இத்தகைய சில கேள்விகளையும் இவரது எழுத்தின் அரசியல் வெளிப்படுத்தியிருக்கிறது. எந்தவொரு சட்டகங்களுக்குள்ளும் நுழைந்து பிதுங்காமல், கிராமத்து ஆற்று நீரோடையைப் போன்று அறபாத்தின் கதை வெளிப்பாடுகள் மிக மிக இயற்கையானவை. நீரில் விழுந்து மிதக்கின்ற பூக்களும் இலைகளுமான ரம்மியங்களும் கரைகளில் சேர்ந்திருக்கும் அழுகலும் துர்நாற்றங்களும் அருகருகிலேயே இருக்கின்றமை இதன் முக்கியமான அம்சம்.

அறபாத்தின் படைப்புலகைக் கவனித்துவந்த கடந்த காலங்களுக்கும் இனி வரும் காலங்களில் பெறப்பட இருக்கின்ற கவனிப்புகளுக்கும் அவை கொண்டிருந்த அர்த்தங்களுக்கும் முற்றிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்க முடியும். இனி வரும் காலங்களில் இதைக் கண்டடைய வாய்ப்பிருக்கின்றது.

வாழ்வின் திருப்பங்களில் அடிபட்டுப் போகின்றவர்கள்மீதான அக்கறைகளைவிட எது முதன்மையாக முடியும் ஒரு படைப்பாளிக்கு? வாழ்வுதானே கதை, கவிதை, கலை எல்லாம் நாம் அனைவரும் ஒரே மாதிரி இருப்பினும் அனைவரும் எப்படி ஒருவராக முடியும்? அந்தக் கேள்விக்கான விடையைத் தேடிச்செல்லும் அறபாத்தின் கதைகளில், அவரைச் சுமந்து செல்லும் மாட்டுவண்டியின் வியர்வையும் மண்ணின் "கரகர" ஒலியும் நமது காதுகளின் ஜன்னல்களைத் தட்டுகின்றன.

சோமாவின் தனிமை, துறவிகளின் அந்தப்புரம் என்ற கதைகளின் முடிவுகள்... வேட்டை, மோட்சம், ஜின், தனிமை போன்ற கதைகள் எழுதப்படுவதற்கான பின்புலங்கள், இக்கருப்பொருள் சார்ந்திருக்கும். அக்கறை என்பது கதைகளைவிட உன்னதமான ஒன்று. அந்த உன்னதம்தான் அறபாத்தின் மீதான மரியாதையை உயர்த்துவதாக எனக்குத் தோன்றுகிறது.
அடுத்து, வெளிப்படையான யுத்த கால நெருக்கடிகள் மற்றும் அதனூடான தாம் சார்ந்த சமூக, மனித அவலங்களை அரசியல் தீர்க்கத்துடன் எழுதிய கதைகளாவன: தேர்தல் காலக் குறிப்புகள், ஓணான்கள், திசைகளின் நடுவே, கழுதைகளின் விஜயம், மறுபடியும், ஆண்மரம், அரங்கம் ஆகிய அரசியல் விமர்சன ரீதியிலான கதைகள். இவற்றுக்குச் சரிநிகரானதும் மற்றொரு போர்க்களமானதுமான மன உலகைப் பிரதானப்படுத்துகின்ற சிறுகதைப் பிரதிகளாகச் சாட்சியங்களாகின்றன. அவரது எழுத்தின் அறமும் அறபாத் என்ற மனிதனும் வேறு வேறல்ல என்பதை இவ்விடத்தில் அழுத்திச் சொல்ல முடியும்.

அடுத்ததாக, சிறுகதை முன்னோடிகளின் ஆகச் சிறந்த கதைகளுடன் வைத்துப் பார்க்கத் தக்க கதைகள் என நான் கருதும் கதைகளைக் குறிப்பிட விரும்புகிறேன். இத்தொகுப்பில் முழுமையான சிறுகதைத் தன்மையைக் கொண்டிருக்கின்ற அக்கதைகள்: மூத்தப்பாவின் மாட்டுவண்டி அடுத்தது இரயில்வே ஸ்டேசன். நினைந்தழுதல், மூத்தம்மா ஆகியன ஒரு தேர்ந்த வாசகனை ஆகர்சிக்கும் தன்மைகளைக் கொண்டமைந்தவை. இக்கதைகள் நவீன மொழியும் பாரம்பரிய மொழியும் சேர்ந்து ஒன்று கலந்துள்ள நேர்த்தியான கலை உருவம் எனலாம். கலை என்பது மிகப் பெரிய போட்டி சிருஷ்டி என்பதைப் படிப்பவன் மனத்தில் உறையவைக்கும் படைப்புகளாகும் இவை.

வித்தியாசமான புது எழுத்து முயற்சியாக ஏவாளின் தோட்டத்தில் கனிகள் மிச்சமிருக்கின்றன அமைந்துள்ளது. கனவுத் தன்மை நிறைந்த கவிதை மொழியுடனான கதை கூறல், வாசிப்பனுபவத்தை மணமாக்குகின்ற கதை இது. பின்பொரு நாளில், அவர் திரும்பிப் பார்க்கும் ஆழ்ந்து மூச்சுவிடக்கூடிய அனேகக் கதைகளைத் தந்திருக்கின்ற ஒரு நிறைவே இப்போதைய அவரது வெற்றியுமாகும்.

முன்முடிவுகளற்றுப் பாத்திரங்களைக் கையாண்டுள்ளமை, பெண்களை "அவள்களாக" உலவவிட்டமை, இவராகச் சலுகைகளையோ கட்டளைகளையோ தராத எழுத்து நேர்மை சிறுகதைகளுக்கு வலுவூட்டியுள்ளன.

இலங்கையின் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிராகரிக்க முடியாத காலத்தின் பதிவுகளாக இக்கதைகள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. வாழ்வின் உள் முகங்களைக் காட்டும் ஒவ்வொரு உடைந்த கண்ணாடிகளிலும் மறைந்திருக்கும் குருவி அச்ச மூட்டக்கூடியது, வன்மம் மிக்கது, அழகின் மாயம் காட்டுவது. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி

(உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி (ஈழத்துச் சிறுகதைகள்), ஆசிரியர்: ஓட்டமாவடி அறபாத், பக்: 207, விலை: ரூ. 130, முதற்பதிப்பு: 2008, வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310)

Site Meter