முதல் பக்கம் » நூல் மதிப்பு

தமிழ் நூல்கள்,புத்தகங்கள்

-

Tamil Books Specials

உறுமீன்களற்ற நதி (கவிதைகள்)

Urumeenkalatra Nathi (Tamil Kavithaigal)
வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001
பக்கங்கள்: 80
விலை: ரூ. 60

அழுத்தம் இல்லாமல் மிக இயல்பான எளிமைதான் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளின் தனித்துவம் - வா. மணிகண்டன்

இசையை ஒரு மாலை நேரத்தில் கோயமுத்தூரில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு இரண்டுமுறை தொலைபேசியில் நாங்கள் பேசியிருக்கிறோம். அதோடு அவரை நானும் என்னை அவரும் மறந்துவிட்டோம். ஆனால் அவருடைய கவிதைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறேன்.
கவிஞனின் கவிதைகளைச் சில சஞ்சிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவ்வப்போது வாசிப்பதைவிடவும், தொகுப்பாக வாசிப்பதில் கிடைக்கும் அனுபவம் ஆசுவாசமானது. தொகுப்பாக்கித் தருவதில் கவிஞனுக்கும் ஆசுவாசம் உண்டு. கவிதைகள் தொகுக்கப்படும் கணத்தில் கவிஞன் கவிதைகளை விட்டு வெளியேறி வாசகன் தன் கவிதையோடு இணையும் புள்ளியை ரசிப்பவனாகிறான்.

இசையின் உறுமீன்களற்ற நதி தொகுப்பு வெளிவந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. கவிதைக்கென ஏதேனும் வரைமுறைகள் இருப்பின் அவற்றைத் தகர்ப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான சாத்தியங்களைத் தன் கவித்துவத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் இத்தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். முடித்தேன் என்னும் சொல் இங்கு நீட்சியுடையது.

கவிதைகள் மனதிற்குள்ளாக உருவாக்கும் வாதைகளையும் அதன் கொதி நிலையையும் விட்டு வெளியேற முடியாத நேரத்தில் அந்தக் கவிதைகளைப் பற்றி எழுதிவிட வேண்டும். ஏனெனில் அப்போது உள்ள பார்வை வாசகனின் பார்வை.

இந்தத் தொகுப்பில் தலைப்புகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. பெரும்பான்மையான தலைப்புகள் கவிதைக்கான மொழியில் இல்லை. விஷூ. சஷ்டிக்கவசம், முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான் போன்றவை கவிதையின் வாசகனை வேறொரு திசைக்கு நகர்த்துகின்றன.
கவிதைகளின் அமைப்பும் மொழியும் இசைக்குக் கச்சிதமாகக் கைகூடியிருப்பதாகச் சொல்வேன். இவரது கவிதைகளில் இருக்கும் கவிதைக்கான சாத்தியங்கள் தொடர்ச்சியாக வாசகனைக் கட்டுக்குள் வைக்கின்றன. கவிதைகளில் இருக்கும் சிறுகதைக்கான சுவாரசியமும் கவிதைக்கான வெளியும் அடர்வனத்தின் புதிர்களை விடுவித்தவாறு நிலவின் வெளிச்சத்தோடு நடக்கும் அனுபவத்தை வாசகனுக்குத் தருகின்றன.

இத்தொகுப்பின் கவிதை மொழியில் இருக்கும் அங்கதம் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது.
தூக்கத்திலிருந்த ராசா
தேவி! உன் கார்குழலின் வனப்பினிலே...
என ஏதோ முனகத் துவங்க
யோவ் மூடிட்டு படுய்யா
என அதட்டினாள் தேவி.

இந்த வரிகளைத் தலைப்போடு சேர்க்காமல் படிக்கும்போது ஒரு மெல்லிய புன்னகை எழுகிறது. இதன் "ராசா வேசம் கட்டும் கூத்துக் கலைஞன்: சில குறிப்புகள்" என்னும் தலைப்போடு சேர்த்து வாசிக்கும்போது உண்டாகும் அதிர்வுகளும் தலைப்பும் கவிதை வரிகளும் மனத்திற்குள் உருவாக்கும் காட்சியமைப்பும் கூத்துக் கலைஞர்களின் துக்கமும் வேறொரு அனுபவத்தைத் தருகின்றன. வெறும் அங்கதம் மட்டுமே கவிதானுபவத்தைத் தருவதில்லை என்பதை இந்தக் கவிதைகள் வாயிலாக உணர முடிகிறது.
பெரும்பாலான கவிதைகள் அழுத்தம் இல்லாமல் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. இந்த எளிமைதான் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளின் தனித்துவம் என நினைக்கிறேன். தான் சொல்லவரும் காட்சியமைப்புகளையும் தன் மனத்தின் கவித்துவ விரிவுகளையும் அதிகப் பிரயத்தனம் இல்லாமல் இசையால் வெளிப்படுத்த முடிகிறது.

அதி ஆழமான
பாழ்கிணறு என் தனிமை
ஒரு சொல்லிட்டு
நீ அதை நிரப்பு

இக்கவிதையில் தன் வாசகனுக்காக இசை உருவாக்கும் பெருவெளி பிரம்மாண்டமாகத் தெரிகிறது.
இங்கே தனிமை என்பது பாழ்கிணறு. பித்து நிலை, நோய்மை, முதுமை போன்றவற்றின் கசந்த பிடிகளுக்குள் சிக்கிச் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கும் தனித்த மனிதனொருவனோடு கவிதையை வாசிப்பவன் தன்னைப் பொருத்திக்கொள்ளும்போது தனிமையின் கொடுமையை அதிர்ச்சியுடன் உணர முடிகிறது.

ஒற்றைச் சொல்கூடப் பாழ்கிணற்றை நிரப்பிவிடும் என்பது, தனிமையில் கசங்கிக்கிடப்பவனுக்கு அந்த ஒற்றைச் சொல்லின் தேவை எத்தனை முக்கியமானது என்பதைக் கவிதையில் கொண்டுவருகிறது. இக் கவிதையை முழுமையாக உள்வாங்க முடியுமெனில் தன்னிலிருந்து இக்கவிதையை உதிர்த்துவிட வாசகன் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கலாம்.
கவிதை சொல்லியைக் கவிதையில் கொண்டுவருவது போன்ற இசையின் சில முயற்சிகள் பழையதாக இருக்கின்றன. ஆனால் முன்னோடிகள் பரீட்சித்த இந்தப் பழைய முயற்சிகளைக் கவிதையில் தவிர்ப்பது என்பது எந்த ஒரு கவிஞனுக்கும் கடினமானதுதான்.

குறைகளைப் பற்றி அதிகம் பேசுவது, கவித்துவ சாத்தியங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சியாகிவிடலாம் என்பதால் அதை நான் குறையாகச் சுட்டப்போவதில்லை. இத்தொகுப்பு சமீபத்திய இளம் கவிஞர்களின் தொகுப்புகளில் முக்கியமானதாக எனக்குப்படுகிறது.

(உறுமீன்களற்ற நதி (கவிதைகள்), ஆசிரியர்: இசை, பக்: 80, விலை: ரூ. 60, முதற்பதிப்பு: அக்டோபர் 2008. வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629 001)

Site Meter