முதல் பக்கம் » நூல் மதிப்பு

தமிழ் நூல்கள்,புத்தகங்கள்

-

Tamil Books Specials

எழுதுவினைஞனின் டயறி (சிறுகதைத் தொகுப்பு)

Ezhuthuvinaignanin Diary (Chirukadhai Thoguppu)
வெளியீடு: வர்ணா பதிப்பகம், பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை, ஸ்ரீலங்கா
பக்கங்கள்: 61
விலை: ரூ. 150

இளைஞர்களின் கனவுகளின் சிதைவுகளையும் அந்த இளைஞர்களை நம்பி வாழ்ந்த ஒரு கடலோரக் கிராமத்தின் சோகம் செறிந்த வாழ்வையும் வெளிப்படுத்துகின்றன - மு. புஷ்பராஜன்

வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் பற்றிய கதைகள்தாம் ஆனந்தமயிலின் சிறுகதைகள். பிள்ளைகளின் நல் வாழ்விற்காக, உழைத்து உழைத்து, நொந்து நொடிந்துபோன தாய்மார், வறுமையால் கல்விக் கனவைத் துறந்து, குடும்பப் பொறுப்பை ஏற்போர், உத்தியோக வருமானத்தின் மூலம் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமலும் தமது காதலை முன்னெடுக்க முடியாமலும் அவதியுறுவோர், மார்க்சியக் கனவுகளைச் சுமந்து உலாவரும் இளையோர், தமிழீழப் போராட்டம் சார்ந்து உயிர் வாழும் உத்தரவாதம் அற்று, மரண தேவதையின் கரிய சிறகுகள் நிழல் கொள்கையில் உயிர் பிழைக்க முனைவோர் எனப் பலர் இவர் படைப்புக் களத்தில் பிரதானம் கொள்கின்றனர். இவரது ஆரம்ப காலக் கதைகள் பெரும்பாலும் யதார்த்தத் தளத்தில் இயங்கினாலும், பின் வந்தவை அதிலிருந்து விலகிய, ஒரு கலைத்துவ இழை நுழைந்த புனைவுத் தளத்தில் இயங்குகின்றன. கணவனை ஆதாரமாகக் கொண்ட சமூக அமைப்பில் கணவர்மாரின் இழப்பில் மனைவியர், மக்கள் கொள்ளும் நெருக்கடிகள், அவலங்கள் துயர்படரும் விதத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகத் தாய்மையின் அதியுச்சக் கனவு தம் புதல்வர்களின் கல்வி சார்ந்த மேன்மையே. அந்தக் கனவுக்காகத் தம்மையே கரைத்து அழித்துக்கொள்ளும் வைராக்கியம் வாய்ந்தவர்கள் அத்தாய்மார்கள். பொன்னியில் (விளக்கீடு) அது ஒரு மறைமுகக் கோடாக இழுபட்டாலும், அந்த ஆசையின் முற்றிய வடிவம் தர்முவின் தாயிடம்தான் (ஒரு கட்டு மரம் காத்திருக்கிறது) வெளிப்படுகிறது. “உங்கள் இரண்டு பேருக்காகவும்தான் இருக்கிறன் இல்லையெண்டா அவர் போனதுபோல கடலில விழுந்து என்ர உயிரை மாச்சிருப்பன்” என அவள் கூறுவது அதனால்தான். அதே சிறு கதையில் பரமுவின் கூற்றாக “நான் ஒரு லோங்ஸ் போட்டு உத்தியோகம் பார்க்க வேணுமெண்டு அவவுக்கு கொள்ளை ஆசை.” பரமுவின் தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தின் சாதாரண வாழ்நிலை கொண்ட தாய்மாருக்கும் அதுவே பொதுவான ஆசையாக அக்காலங்களில் இருந்தது.

அவர்களது ஆசைகள் அவ்வாறாக இருந்தாலும் அவர்களுக்காகத் திறந்துவிடப்பட்ட வாசல்வழிச் சென்றடையும் அந்த உத்தியோக வாழ்வு எவ்வாறாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள ஒரு எழுதுவினைஞனின் டயறிக்குத் தான் போக வேண்டும். கொழும்பு போன்ற பிற மாவட்டங்களில் (இச் சிறுகதையின் நிகழ்களம் கொழும்பு அல்ல) குடும்பச் சுமையைத் தோளில் சுமந்துசென்ற அநேக எழுதுவினைஞர்களின் பொதுவாழ்வாக அதைக் கருதிக்கொள்ளலாம். தமது சொந்த ஆசைகளையும் முன்னெடுக்க முடியாமல், குடும்பத்தின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் இரண்டக நிலை அவர்களுடையது. “அக்கரையிலிருந்து சிறிய கட்டுமரம் வருகிறது. சிறுவன் அதனைச் செலுத்தி வந்தான். நடுவே வலைவீசினான். அவன் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். நான்கூட அதன்மூலம் மகிழ்ச்சியைத் தேடியிருக்கக்கூடும். ஆனால் பெற்றுவிட்ட நியமனம் ...” இங்கே பெற்றுவிட்ட நியமனம் என்பது தான் நமது வாழ்வுசார்ந்த ஆசைகள் வேறாக இருக்க, சமூக மதிப்பீடு என்னும் மாய நீரோட்டத்தில் நாம் கண்ணீருடன் இழுபட்டுச் செல்வதைச் சுட்டுகிறது. “இந்த இரும்பு உருண்டைகளையெல்லாம் காலில் பிணைப்பவர்கள், சுவர்களிலே தங்களைத் தாங்களே ஆணிகளால் அடித்துவைப்பவர்கள், சுதந்திரங்கள் - சுகங்களையெல்லாம் அடகுவைப்பவர்கள், எங்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்!” என அவ்விளைஞன் கருதுவதும் அதைத் தான். வாழ்வில் நாம் நம்பிக்கைகளைத் தேக்கிவைத்தாலும் சாதாரணர்களின் நிலை ஆசிரியர் ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது சிறுகதையில் சொல்வது போல் “ஆகாயத்தில் நட்சத்திரங்கள் குறைவாகத்தான் இருந்தன. கரும் பச்சை மேகங்கள் ஆங்காங்கே காணப்பட்டன”வே.

வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து வெளியேறுவதற்கு மாற்று வழிகளைத் தேட முனைகையில் இளைஞர்கள் இலகுவாகச் சென்றடையக்கூடிய புகலிடமாக இருப்பது மார்க்சியக் கோட்பாடே. மார்க்சியச் சார்புக் கருத்துகளை உள்வாங்கிய கதைகளில் ‘திருவிழா’வில் உள்ள வெளிப்பாட்டு முறையின் தேர்ச்சி ‘நண்பனும் ஒரு புளியமரமும்’ கதையில் இல்லை. ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்னும் பாடல், ‘சிகப் பாலையும் வெள்ளையாலையும் எழுதிக் கிடக்கும்’ என்பன போன்ற வாசகங்கள், கோவிலின் கலகலப்புடன் கலந்துகிடந்தபோதிலும், ஆசிரியரின் கருத்தை நாசூக்காக வெளிப்படுத்துகின்றன. இந்தப் படைப்பின் கலைத்துவ நகாசுத்தனம், ‘நண்பனும் ஒரு புளியமரத்’திலும் இல்லாமலேயே போய்விட்டது. “எப்ப புரட்சி வரப்போகுது?” “சமுதாயம் பக்குவப்படேக்கைதான் புரட்சி வெடிக்கும்” என்பன போன்ற உரையாடல்கள் ஒரு ‘மைக்கைப் போல ஒலிக்கிறது. மார்க்சியக் கருத்துகள் படைப்புகளில் இடம்பெறக் கூடாது என்பதல்ல இதன் பொருள். மாறாக ஒரு படைப்பில் குறிப்பாக, ‘திருவிழா’வில் வரும் வெளிப்பாட்டுத் திறனற்று இருக்கிறதே என்பதுதான் என் ஆதங்கம்.

கால வரிசையின்படி ‘திருவிழா’விற்குப் பின்னரே இச்சிறுகதை எழுதப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆசிரியரின் சறுக்கல் தவிர்த்திருக்கக்கூடியதே.சமூக நடைமுறைகளின் மீது படைப்புமனம் கொண்ட எதிர்வினையின் வெளிப்பாட்டுமுறை ‘ஒற்றைக் கால் கோழி’ சிறுகதையில் மாற்றம் பெறுகின்றது. ஈழத்து இலக்கியப் பரப்பில் உமா வரதராஜன், அல் அஸி மத், ரஞ்சகுமார் ஆகியோர் வித்தியாசமான வெளிப்பாட்டுமுறையைத் தமது படைப்புகளில் கையாண்டுள்ளனர். பின்னாளில் இதன் தொடர்ச்சி பிரகலாத ஹேமந்த் (கருணாகரன்) தின் ‘வம்சக் கனவு’ சிறுகதையில் அவதானிக்கப்பட்டது. இவர்களின் வெளிப்பாட்டுமுறையுடன் ‘ஒற்றைக்கால் கோழி’யை ஒப்பிட முடியாவிடினும் ஆனந்தமயிலுக்கான திருப்பு முனை இச்சிறுகதைதான். ஒற்றைப் பரிமாணக் கதைசொல்லும் முறையிலிருந்து விலகி, இருதளங்களில் கதைமாந்தர்கள், குறியீட்டு உருவங்கள் இணைவுகொள்ளும் மெல்லிய திரையை இக்கதையில்தான் கையாள்கிறார். வாழ்விற்காக எல்லா முனைகளையும் தொட்டு முன்னகர முனையும் அப்படைப்பாளியும் ஒரு காலை இழந்த பின்னும் உயிர்வாழ முனையும் அக்கோழியும் இணையும் புள்ளிதான் இதன் முரண்நகை. அப்படைப்பாளி தன்னை செக்கோவ், புதுமைப்பித்தன், வைக்கம் முகம்மது பசீர் ஆகியோருடன் ஒப்பிட்டுக்கொள்வது அவர் சுதந்திரம். ஆனால் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிந்திப்போவதாக அவர் கருதுவது எள்ளலாகச் சொல்லப்பட்டாலும் அதீதமான கற்பனையாகவேபடுகிறது. கோழியின் ஒற்றைக்கால் துண்டுபட்டுப் போனதற்கு இரங்கும் அப்படைப்பாளி, ஆத்திரத்தில் மனைவியைச் சுவரில் ஆணிகளால் அடித்துவைக்க முனைவது அச்ச மூட்டுவதாக இருக்கிறது. அன்பினதும் வெறுப்பினதும் மையம் ஒன்றென்பது இவ்வாறுதான் வெளிப்படுகிறதா?

இன்றைய தமிழீழ யுத்தச் சூழலில், ஒரு ‘பொம்பரின்’ இரைச்சல் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் பீதி, உயிர்தப்ப அவர்கள் உடன்தேடும் புகலிடம் எவ்விதப் பாதுகாப்பு அற்றதாயினும், அச்சத்தில் மனம் தேடுவதென்னவோ ஒரு பாதுகாப்பு உணர்வைத்தான். வாழும் வெளியாய், ஒரு காலத்தில் விரிந்து பரந்த கடலைத் தமது வாழ்விற்காக ஆண்டவர்கள், குறுகிய கடலெல்லைக்குள் முடங்கியதால், நலிந்த கடலோரக் கிராமம் ‘முருகைக்கற் பூக்களாய்’, யாழின் பெருந்துயராய்ப் படிந்துவிட்ட இடப்பெயர்வு ‘காக்காச்சி மகளே’யாயும் முன்வைக்கப்படுகின்றது.‘வாழும்வெளி’ ஒரு யதார்த்தக் கதையாக இருந்ததனால் போரின் அவலநிலை பற்றியும் அவர்கள் மன நிலைகள் பற்றியும் மிகை ஒலிகளற்ற இயல்பு நிலையில், ஒரு சமவெளியில் விவரித்துச் சுதந்திரமாக நகர ஆசிரியரால் முடிகிறது. “சந்திப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் இழந்துவிட்ட இளமையின் தோற்றங்கள்,” பிரயாணிகள் பல நூற்றாண்டுகளுக்கு முந்திய பாரதத்தைச் சுமப்பதாக உணர்கின்றனர்” என்பவை மிகக் கூர்மையான அவதானிப்பும் நாசூக்கான வெளிப்பாட்டுமுறையும் கொண்டவை. ஏனைய இரு கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுதியான உருவச் செழுமையுடன், கவிதைச் செறிவுகலந்து மொழியில் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. நான் முன்னர் குறிப்பிட்ட உமா வரதராஜன், அல் அஸீமத், ரஞ்சகுமார் ஆகியோருடன் ஆனந்த மயில் இணைவது இவ்விரு சிறுகதைகளால்தான். அவர்கள் குதித்து நீந்தவும் சுழியோடவும் முடிந்த கடலில் இப்பொழுது “ஆளில்லாத கட்டுமரங்களும் குறுந்தடிகளுமே கடலில் அசைகின்றன.” கடற்பூக்கள் கடலிலிருந்து மேலே கொண்டுவரக்கூடியதாக இருந்தது. ஆனால் அவற்றின் இயற்கை வனப்பு கெட்டுப்போய் இருந்தது.” “சிலர் சமுத்திரத்தில் ஏதோ ஒன்றை உற்றுப் பார்க்கிறார்கள். எங்கும் அகதிமை தெரிகிறது.”

இவை அக்கடலின் புதல்வர்களின் சோகங்களைக் குறியீட்டுரீதியாக நமக்கு உணர்த்துகின்றன. “காகங்களின் சகுனக் குறியை அறிந்திருந்த அக்கா சுவாத்திய வசதிக்காகப் பிறந்ததே ஒரு மண்வீட்டில்தான்” என்னும் அட்டகாசமான எள்ளலுடன் ஆரம்பமாகும் ‘காக்காச்சி மகள்’ சிறுகதை முழுவதும் இந்த எள்ளல் தொய்வின்றித் தொடர்ந்து “இராஜதந்திரம் தெரியாது வாழ்ந்த அவளுக்கு கல்வெட்டோ நடுகல்லோ இல்லாமல்போனது. ஆனால் எங்காவது ஒரு காகப்பிரலாபமாவது இருக்குமல்லவா!”என முடிகிறது இச்சிறுகதை. ஒற்றைக்கால் கோழியில் ஆரம்பமான அவரது எள்ளலின் உச்சம் இச்சிறு கதைதான். இது எள்ளலின் உச்சம் மாத்திரமல்ல, விமர்சகர்களால் ஒதுக்கிக்கொள்ள முடியாத ஒரு முக்கியச் சிறுகதையுமாகும். ‘கலைவந்தபோது’ மேற்குறிப்பிட்ட கதைகளின் தேர்ச்சி இல்லையாயினும் அது கடலில் தெளிவும் ஆழமும் கொண்டு அசைவுடன் நகர்கிறது. ஆன்ம விசாரமூடாக ஒளிதேடும் முயற்சி. அது கால்போன பின்னர் வந்ததனால் அதன் தர்க்கத்தின் வலு ஆட்கொள்கிறது. வாழ்வு சார்ந்து மார்க்சியத்தில் தொடங்கிய தேடல் ஆன்மிகத்திடம் வந்துசேரும் முடிவாகப் பலரிடம் நிகழ்ந்துள்ளது. ‘சர்வாதிகாரியிலிருந்து சன்னியாசிவரை’. நாம் சர்வாதிகாரி எனக் குறிப்பிடாவிட்டாலும் ‘செம்மையிலிருந்து காவிவரை’ என்றாவது குறிப்பிடலாம். ஞானம்பாள் என்பது ஞானம் பற்றிய தர்க்கத்திற்கான மனக்குரலின் குறியீடுதான். மு. தளைய சிங்கத்தின் நல்லதம்பி வகை.‘விளக்கீடு, ‘கொலுமீட்பு’, ‘விதி’ ஆகிய சிறுகதைகள் என் கவனத்தைக் கோரவில்லை. ‘நண்பனும் ஒரு புளியமரமும்’ கதைகூட ‘திருவிழா’வுடன் ஒப்பிடுவதற்காகவே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுவும் மேற்கூறிய மூன்று சிறுகதைகளுடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியதே. யதார்த்தக் கதைகளின் பேச்சுவழக்கில் ஆசிரியர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

‘விளக்கீடு’ சிறுகதையில் தனிக் குடிசையாக ஆசிரியரால் குறிப்பிடப்படுவது, பின்னர் வீடு எனக் குறிப்பிடப்படுகிறது. இதே கதையில் “எங்கோ பனங்கூடலின் மூலையில் காவோலை ஒன்று விழுந்து சத்தம் கேட்கிறது” என்ற வாக்கியத்தின் ‘எங்கோ’ என்ற நிச்சயமற்ற தன்மைக்கும், ‘மூலையில்’ என்ற நிச்சயத்திற்கும் உள்ள முரண்பாட்டில் அவர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இது தவிர ‘வெளிப்போந்தது’, இரத்தத்திற்குப் பதிலான ‘சிவப்புத் திரவம்’ போன்ற கடின சொற்களைத் தவிர்த்திருக்கலாம்.இச்சிறுகதைத் தொகுதி மணியோடர் பொருளாதாரத்தில் தங்கியிருந்த யாழ்ப்பாண மத்தியதரவர்க்க, எளிய மக்கள் வாழ்வில், உத்தியோகம் காரணமாகக் கொழும்பு போன்ற நகரங்களில் ஆர்வத்துடன் வாழ்ந்த இளைஞர்களின் கனவுகளின் சிதைவுகளையும் அந்த இளைஞர்களை நம்பி வாழ்ந்த ஒரு கடலோரக் கிராமத்தின் சோகம் செறிந்த வாழ்வையும் வெளிப்படுத்தி நிற்கிறது.ஆனந்தமயில் 70களில் எழுதத் தொடங்கி இன்றுவரை மிகமிகக் குறைவான படைப்புகளையே அளித்துள்ளார்.

ஒவ்வொரு தசாப்தமாகக் கணித்துக்கொண்டாலும் ஆகக்கூடியது ஐந்து சிறுகதைகளே. இது இவர் அடிக்கடி எழுதும் போக்குடையவர் அல்ல என்பதையே உணர்த்துகிறது. 98இக்குப் பின் எச்சிறுகதையையும் படைக்காத நிலையில் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இத்தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இதனால் ஈழத்து இலக்கியப் பரப்பில் இப்படைப்பாளியின் பெயர் ஞாபகங்களிலிருந்து என்றென்றுமாக அகற்றப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இச்சிறிய சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஆனந்தமயில் ஈழத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.

(எழுதுவினைஞனின் டயறி (சிறுகதைத் தொகுப்பு), ஆசிரியர்: த. ஆனந்தமயில், பக்: 61, விலை: ரூ. 150, முதற்பதிப்பு: 2008, வெளியீடு: வர்ணா பதிப்பகம், பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை, ஸ்ரீலங்கா)

Site Meter