முதல் பக்கம் » நூல் மதிப்பு

தமிழ் நூல்கள்,புத்தகங்கள்

-

Tamil Books Specials

நிசி அகவல் (கவிதை)

Nici Agaval (Tamil Kavithai)
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ் யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 24
பக்கங்கள்: 80
விலை: ரூ. 60

நிசி உலகத்தில் கனவு, காமம் மற்றும் கடவுள் பற்றிய விஷயங்கள் சுழல்கின்றன - ஞானக்கூத்தன்

நிசி அகவல் என்றால் நிசி கூப்பிடுகிறது என்பது பொருள். எதற்காகக் கூப்பிடுகிறது என்ன சொல்லக் கூப்பிடுகிறது என்பது நூலின் உள்ளடக்கம். நிசி அகவல் என்றால் நிசியின் பாடல் என்றும் பொருள்படும். நிசி அழைக்கிறது. நிசி பாடுகிறது. கலை என்றாலே ஒருவித அழைப்புதான். ஒருவர் பாடினால் தாங்கள் அழைக்கப்பட்டது போல மக்கள் கூடுகிறார்கள். கலை அழைத்தால் மக்கள் அங்கே கூட்டமாகப் போகிறார்கள். ஓவிய, நாடகக் கலைகளும் அப்படித்தான். எழுத்து முறை தோன்றுவதற்கு முன்பாகவே தமிழில் கவிதை தோன்றிவிட்டதால் அது ஒருவரைக் கூப்பிட்டுச் சொல்லும் முறையில் படைக்கப்பட்டது. கேட்பவர் இருக்கிறார் என்பதை உறுதிசெய்து கொண்டதுதான் அகவல். தொல்காப்பியர் இலக்கணம் எழுதிய காலத்தில் அகவல் அது எழுதப்பட்ட ஆசிரியப்பாவைக் காட்டிலும் வேறானதாகத் தெரிந்தது போலும். அதனால் தொல்காப்பியர் அகவல் என்பது ஆசிரியம்மே என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அய்யப்பமாதவனின் நிசி உலகத்தில் கனவு காமம், மற்றும் கடவுள் பற்றிய விஷயங்கள் சுழல்கின்றன. தாந்தரிக உலகில் அனாசாரமே ஆதாரமாகக் கொள்வார்களாம். மது, மாது மற்றும் மாமிசம் மூன்று மகாரங்கள் விரும்பப்படுபவையாம். நிசி அகவல் பிரச்சாரத் தொனியில்லாமல் இதைக் கொண்டுள்ளது. கனவும் காமமும் வெளிப்படும் ஒரு கவிதை "ஒரு மகிமை". அக் கவிதை மிக நெருக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு விதத்தில் இக்கவிதை கலித்தொகையின் முல்லைக்கலியில் வரும் ஒரு பாட்டை நினைவூட்டுகிறது. முதலில் "ஒரு மகிமை" கவிதையைப் பார்க்கலாம்.

ஒரு மகிமை
அவள் கோயம்புத்தூருக்குப் போய்விட்டாள்.
நான் ஒழுங்காக இருந்த
வீட்டினில் விழுந்து கிடந்தேன்.
நண்பர்கள் வந்து விட்டனர்
ஒரே குடி கும்மாளம்
சிகரெட்டுகள் அணைக்கப்பட்டுவிட்டன
நான் அதி சுதந்திரவாதியாய் இருந்தேன்
இஷ்டம் போல் வளைத்தேன். என் மூளையையும்
அவள் வேறொரு இடத்தில் உழன்று படுத்திருந்தாள்
நான் நண்பர்களுடன் குப்புறப் படுத்திருந்தேன்
அழகிய கனவொன்றில் ஒரு பெண்ணுடன்
சல்லாபித்துக்கொண்டிருந்தேன்.
புதிதான பெண் புதிதான நிர்வாணம்
புணர்தலில் உலகத்தைவிட்டு
விடைபெற நினைத்தேன்
விடிந்தபோது நண்பர்கள்
தலைதெறிக்கப் பணிக்குத் திரும்பினர்
நான் வீட்டை ஒழுங்குக்கு கொண்டுவந்தேன்
ஊரிலிருந்து திரும்பியவள்
ஒரு சிகரெட் துண்டைக் கண்டு பிடித்துவிட்டாள்.

கவிதையின் முதல் வரி அவள் வெளியூர் போனதை அறிவிக்கிறது. கடைசி வரிக்கு முதல் வரி அவள் ஊர் திரும்பியதை அறிவிக்கிறது. எனவே ஒரு நிகழ்ச்சியை முழுமையான வளையமாக்குகிறது. ஒழுங்கு, கும்மாளம், அதி சுதந்திரம், கனவு, புதிது, பணி முதலிய சொற்கள் இக்கவிதையைச் சிறப்பாகக் கட்டுகின்றன. கவிதை முடிகிற தறுவாயில் தலை காட்டும் "விடிந்தபோது" என்ற சொல்லைக் கொண்ட நிகழ்ச்சி இரவில் நடைபெற்றிருக்கிறது என்பதை வாசகன் அறிகிறான். முதல் வரியில் இடம்பெறும் "அவள்" என்று குறிப்பிடப்பட்டது நவில்வோனின் மனைவி என்பதைக் குறிப்பால் அறிகிறோம். இரண்டாம் வரியில் குறிப் பிடப்பட்ட ஒழுங்கு அவள் வெளியூர் போனதும் குலைந்துவிடுகிறது. அவள் ஒழுங்கின் அவதாரம். அவள் போனதும் ஒழுங்கின்மை ஆட்டம் போடுகிறது. காலம் அப்போது இரவு. ஒழுங்கின்மையைக் காட்டும் பொருள்கள் குடி, கும்மாளம், புகை என்பவை. அவன் நிலைமைகூட விழுந்து கிடப்பதும், குப்புறக் கிடப்பதும்தான் அவர் கனவு காண்கிறார்.

அழகிய கனவொன்றில் ஒரு பெண்ணுடன்
சல்லாபித்துக்கொண்டிருந்தேன்.

முதல் வரியில் வெளியூர் போனவள் ஒழுங்குடமையின் சொரூபம் என்றால் கனவில் வந்தவள் அதற்கு மாறானவள் இவன் உலகத்தில் இவனை இருக்கச் செய்பவள் அல்லள். மாறாக உலகத்தை விட்டு விடைபெற வைப்பவள், இவள் கனவில் வந்தவளாதலால் அமானுஷ்யமானவள். இந்தக் கற்பனையில் தான் நவில்வோன் அதிசுதந்திரவாதியாகத் தன்னை உணர்கிறான்.

விடிந்தபோது நண்பர்கள்
தலை தெறிக்கப் பணிக்குத் திரும்பினர்

நண்பர்கள் தங்கள் வீடுகளுக்கோ அல்லது மேன்ஷன் அறைகளுக்கோ திரும்பவில்லை. மாறாகத் தலை தெறிக்கப் பணிக்குத்தான் திரும்பினார்கள் என்கிறது கவிதை. தலை தெறிக்கப் பணிக்குத் திரும்பியவர்களின் கல்யாண நிலைமை கூறப்படவில்லை. அவர்கள் கல்யாணம் ஆனவர்களா அல்லது ஆகாதவர்களா என்பது தெரியாது. ஆனால் இரவின் சுகத்தை, சுதந்திரத்தை விரும்பியவர்கள் என்பது நிச்சயம். இருப்பினும் ஒழுங்கைக் கைவிட்டுவிட்டவர்கள் அல்லர். ஏனெனில் அவர்கள் பணிக்குத் தலைதெறிக்கத் திரும்பியவர்கள். பகல், வேலை இரண்டும் ஒழுங்குடைமையின் சட்டாம்பிள்ளையாக நிற்கிறது.

ஊரிலிருந்து திரும்பியவள்
ஒரு சிகரெட் துண்டைக் கண்டுபிடித்துவிட்டாள்.

என்று முடிகிறது கவிதை. காவ்யம் (கவிதை) நாடகத்தில் முடிகிறது என்று வடமொழிக் கவிதையியலில் ஒரு கருத்துண்டு. கவிதை ஒரு மெய்ப்பாட்டை வெளிப்படுத்துவது. அதாவது காட்சியாவது. இதன் வழி சுவை அறிவது "ஒரு மகிமை" என்ற அய்யப்பமாதவனின் கவிதை ஒரு நகைச்சுவைக் கவிதை. ஆனால் இந்த நகைச்சுவை வாசகனுக்குக் கிட்டுகிற ஒன்றே தவிர பாத்திரத்துக்கு அல்ல. நிம்மதியில் தொடங்கி, சுகிப்பதில் வளர்ந்து, சுதந்திர உணர்வில் திரிந்து, இறுதியில் பயத்தில் முடிகிறது பாத்திரத்தின் நிலைமை. கண்டுபிடித்துவிட்டாள். என்பது தான் நாடகமாக முடிகிறது. அப்புறம் என்ன ஆயிற்றோ கண்டுபிடிக்கப்பட்ட அவன் நிலை.
கதை வெளிப்படுவது - இது ஒரு பெண்ணாய்க் கண்டுபிடிக்கப்படுவது என்ற செய்திதான் இக்கவிதை. "முல்லைக் கலியில்" ஒரு பாட்டை நினைவுபடுத்துகிறது.

யாருக்கும் தெரியாமல் ஒருவர் குடித்த கள்ளானது
நாணாமல் தன்னைப் பிறர்க்குத் தெரிவித்து
விடுவது போல
ஆயன் கொடுத்த முல்லை மாலையை
என் முடியில் கோத்துச் சூட்டினேன்.
தோழி!
அன்னையும் அத்தனும் வீட்டில் இருக்க
தலைக்கு எண்ணெய் தேய்க்க செவிலித்தாய்
விரிந்த என் கூந்தலிலிருந்து
அன்னை முன் விழுந்தது பூ.

என்ற கருத்துடையது அந்த முல்லைக் கலி (115) இங்கே பெண்ணின் தலையிலிருந்து செவிலி வளரும் பொழுது விழுந்த முல்லைப் பூ அவள் ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதைப் பெற்றோருக்குக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அய்யப்பமாதவனின் கவிதையில் கண்டுபிடிக்கப்பட்ட சிகரெட் துண்டு மனைவி ஊரில் இல்லாதபோது கணவன் என்ன செய்திருப்பான் என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. முல்லைப்பாட்டைப் போலவே அய்யப்ப மாதவனின் கவிதையும் பல குறிப்புகள் வைத்து நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்று முல்லைக்கலி மற்றது மருதம்-திணை என்னவென்று கேட்டால் - மனைவி சிகரெட் துண்டைக் கண்டுபிடித்துவிட்டாலும் அவளால் கண்டுபிடிக்க முடியாதது அவன் கண்ட அழகிய கனவும் அதில் புழங்கிய பெண்ணும். முல்லைக் கலியில் விழுந்த முல்லைப் பூவைப் பார்த்ததும் பெண்ணின் தாய் அதனை வினவவும் செய்யாள். சினவவுஞ் செய்யாள். நெருப்புக் கை தொட்டவர் போல வீதிகத் திட்டு நீங்கிப் புறங்கடைப் போயினாள். "ஆனால் ஒரு மகிமை கவிதையில் அவள் கண்டுபிடித்துவிட்டாள் என்பதே பெரிய ஆபத்தைத் தருகிற குறிப்பாக அமைகிறது". இரண்டு கவிதைகளிலும் பெண்ணின் தடய இயல் அறிவு பளிச்சிடுகிறது!

நிசி அகவல் காட்டும் உலகம் அச்சம் தருவதாகவும் இருக்கிறது. காதல் கவிதை போல் தெரியும் காற்றுத் தாவணி என்ற கவிதை இதற்கு உதாரணமாகிறது.
காற்றுத்தாவணி
காற்றுள் மரத்தின் நடனம் ஓவியம்
மெல்லிய பழுத்த இலை
பிளாஸ்டிக் பை
இலவம்பஞ்சு
காகிதம் காற்றுக்குள் மிதக்கும்
காற்றுவெளியெங்கும் திரியும்
காற்றைக் கொஞ்சும்
காற்றே உயிர்
காற்றே பலம் காற்றே இறகு
காற்று ஒரு சருகை ஒரு மரத்தை
ஒரு ஊரை ஒரு சமுத்திரத்தை
ஒரு பெரும் மலையைக்கூடவும் நகர்த்திவிடும்
ஆயினும் காற்று
பெண்ணின் மெல்லிய தாவணிதான்.

காற்று... ஒரு மரத்தை ஒரு ஊரை, ஒரு சமுத்திரத்தை ஒரு பெரும் மலையைக் கூடவும் நகர்த்திவிடும் என்று தெரிவித்த பிறகு "காற்று பெண்ணின் மெல்லிய தாவணிதான் என்ற பேச்சை நம்பலாமா கூடாதா என்று சந்தேகம் வருகிறது. தாவணிகள் அதுவும் மெல்லிய தாவணிகள் ஆபத்தின் உறைவிடம் அல்லவா?
நிசி அகவலில் தெய்வம் இருக்கிறதா? இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடவுளைப் பற்றிக் கவிதை படைத்துக்கொண்டிருக்கும் மொழி உலகிலேயே தமிழ் மொழியாகத்தான் இருக்கும். இந்தியக் கடவுள்கள் தனி வகையானவர்கள். இவர்களது அபகீர்த்தியை எண்ணிப் பார்த்தால் இவர்களைப் போற்ற யாருக்கும் மனம் வராது என்று தோன்றும். திருட்டு, கயமை, ஏமாற்று என்று பல குற்றச்சாட்டுகளிலிருந்து இன்னமும் மீள முடியாத நிலையிலேயே வணங்கப்பட்டு வருகின்றனர். இறைவன் செயல்கள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்று நம்புகிறார்கள். அருள், மருள் எல்லாம் அவனிடமே உள்ளதெனக் கொள்கிறார்கள். நாத்திகக் கருத்தும் கடவுளின் ஒரு இயல்பாலேயே உருவாகிற தென்கிறார்கள். காஃப்கா கூட சொல்லியிருக்கிறார். We are the nihilist idea in the brain of god: (நாங்கள் கடவுளின் மூளையில் இருக்கும் அவ நம்பிக்கை கருத்து.) நிசி அகவலில் "உயிர் விடும் பிரமை" என்ற கவிதை இன்றைய தேதிவரை நீடித்து வரும்-நாடெங்கிலும்- வழக்கத்தைப் பதிவு செய்கிறது.

ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர்
ஆக்கும் யாகத் தவி உணவை
ஈட்டும் கருணை இறைவன் இருகை
ஏந்திப் புசிப்பரோ கூறுமையா
என்று புத்தர் கேட்டதைப் பல நூற்றாண்டுகளாக மக்கள் புறக் கணித்தே வருகிறார்கள்.
பக்தையின் ஆடு மீது
ஓங்கி முடித்த அரிவாளின் ரத்தம்
அம்மன் மீது தெறித்துவிழ....
மலை ஏறினாள்
அம்மன்

தெருவிற்கே வேடிக்கை காட்டினாள் அம்மன் என்கிறது கவிதை. அது என்ன வேடிக்கையோ! ஆடு பலி தரப்படும் இந்தக் கவிதையில் "அருள்" என்ற சொல் இடம்பெற நேர்ந்தது ஒரு வேடிக்கைதான். கடைசி அடிகள் வாசகன் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது அம்மன் மலை ஏறியது மன நிறைவுடன்தானா என்று. இல்லை வேறு காரணமா?
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எவ்வினம் ஆனாம் அருள்
என்று வியந்தார் வள்ளுவர். இக்கவிதையில் தெய்வமும் அதன் எதிரான அசுரமும் ஓரிடத்திலேயே உள்ளதாக காஃப்கா சொன்னது போல்- கொள்ளலாமா?
நிசி அகவலின் குரல் கேட்கிறது.
குறிப்பு:
1. சங்க இலக்கியத்தில் தனிச் சிறப்புடையது கலித்தொகை. "கற்றோர் ஏத்தும் கலி" என்று புகழப்பட்டது. முல்லைக் கலியை எழுதியவர் சோழன் நல்லுருத்திரன்.
2. கட்டுரையில் முல்லைக் கலியின் பாட்டு எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாசகர்கள் மூலத்தைப் படிக்க வேண்டும்.
(நிசி அகவல் (கவிதை), ஆசிரியர்: அய்யப்பமாதவன், பக்: 80, விலை: ரூ. 60, முதல் பதிப்பு: டிசம்பர் 2008, வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ் யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை - 24)

Site Meter