முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

கைநாட்டுக் கவிதைகள் (38)

மருது அழகுராஜ்

ஒளிர்றாடோய்...

பொன்னிக்கு
தேதி வச்சாச்சு!

மாப்புள
பொட்டப்பட்டியாம்

தொபாயில
வேலை பாக்குறாராம்!

ஒரு மாச லீவுல
ஊருக்கு வந்து
கல்யாணத்த முடிச்சிட்டு
போகும்போது
பொன்னிய
பொறந்த வீட்டுலயே
விட்டுட்டு
போயிடுவாராம்..,

ரெண்டு வருசத்துக்கு
ஒரு தடவ
மூனுமாச லீவுல
வந்து போவாராம்

"எலே,
ரெண்டு வருசத்துக்கு
ஒரு தடவ மூனு மாசம்
வாழுறதுக்கா
பொன்னிக்கு
கல்யாணம்?

பேசாம
உள்ளூரு மாப்புளயா
பாத்திருக்கலாம்...

எங்க ஊரு பெருசுக
அலுத்துக்கிதுக!

மச்சு வீடு,
பத்து ஏக்கர் நெலம்,
கெணறு, பம்பு செட்டு

இத்தோட
தொபாய் செண்டும்
தூக்கலா அடிக்க

பொன்னியோட
அப்பன் ஆத்தாவுக்கு
புடிச்சிப் போச்சு!

பெறகென்ன...

பிள்ளையார்பட்டி கோயில்ல
கல்யாணம் முடிஞ்சு
மாப்புள்ள வீட்டுல
இருவீட்டார் விருந்து

நல்ல கூட்டம்!

மாப்புள்ளையும் பரவாயில்ல..,

ஒரு வழியா
பொட்டப்பட்டி மாப்புள்ள
தொபாய்க்கு போயாச்சு...

ராவும் பகலுமா
எரயப்போட்டு
பசியக் கௌப்பிவிட்டுட்டு
'பய' பணம்
தேடப்போயிட்டான்

பாவம் பொன்னி
இருபத்தேழு
வயசு வரைக்கும்

எவனாவது
பொன்னுபாக்க
வருவானான்னு

காத்துக்கெடந்துச்சு!

இப்ப என்னடான்னா
போஸ்ட்டு மேன்
எப்ப வருவான்னு
வீதிய
வெறிச்சுப்பாத்துக்கிட்டு நிக்குது

"பொட்டப்பட்டியான்
விட்டத
லெட்டர் வழியா
தொடர்றானாக்கும்"

வெடலப்பயலுக கிண்டல் வேற...

கதை இப்படியிருக்க...

நேத்து தொபாயிலருந்து
தந்தி வந்துச்சாம்

சதாம புடிச்சு
செயில்ல அடைச்சதிலிருந்து
சதா குண்டு
வெடிக்குமோன்னு
பயமா கெடக்கு...

அதால,

வேலைய விட்டுட்டு
வெகு சீக்கிரம்
வரேன்னு தகவலாம்!

பொன்னிக்கு
தலகால் புரியல

சீக்குபுடிச்ச கோழியாட்டம்
சோர்ந்துகெடந்தவ

ரேசுக்கு தயாராகும்
குதிர கணக்கா
துடிப்பா திரியிறா

இப்பல்லாம் நம்ம பொன்னி

'சந்திவீரன்' சாமியவிட
சதாம் உசேனத்தான்
சதா கும்பிடுறா!

பொன்னி ஒளிர்றாடோய்!....

கவிதை தொகுப்பு

Site Meter