முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

கைநாட்டுக் கவிதைகள் (37)

மருது அழகுராஜ்

ஒசந்த பனைமரம்!

அம்புட்டு
அழகா இருக்கும்னு
சொக்கம்பய
சொன்னத கேட்டு...

நம்ம உடையப்பன்
ஒசந்த பனைமரத்தில்
உசுர பிடிச்சுக்கிட்டு
ஏறி ஒக்காந்து

ஊரு மொத்தத்தையும்
உத்துப் பாக்கையில

சிதம்பரம் செட்டியார் வீடு

முத்தையா கோனார் வீடு

வடிவேல்பிள்ளை வீடு

ஷேக்பாவா ரைஸ் மில்லு

நெவலிசேர்வை பொட்டிக்கடை

எல்லாமும் தெரிஞ்சது...

எம்புட்டும் முயற்சித்தும்
தன்வீட்டு குடிசை மட்டும்
கண்ணுலயே காணல!

ஒசரநின்னு பாத்தாலும்
உத்துக்கிடந்து பாத்தாலும்

கண்ணுல தட்டாத அளவுக்கு
நாம எவ்வளவு
தாழ்ந்துகெடக்கோம்னு
நெனைச்சபோது
வெடிச்சு வந்தது அழுக

அதுல பொறந்த
வைராக்கியந்தான்
பட்டணுத்துல
இன்னக்கி
அன்னாந்து பாக்குறாப்புல
அடுக்குமாடி வீடுகளா
கட்டித்தீக்கிறான்!

கவிதை தொகுப்பு

Site Meter