கன்னி -

Virgo 2011 Tamil Predictions

ஜனவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 19, 24, 27, 28.

இந்த மாதம் 3, 4 வீடுகளில் சஞ்சரிக்கும் சுக்ரன், தன் பங்குக்கு வியாபாரிகளுக்கு, வாடிக்கையாளர்களின் தேவைக்குரிய பொருள்களை அளித்து அவர்களின் நன்மதிப்பை பெற உதவிடுவார். 7ம் தேதி முதல் 6ம் வீட்டிற்கு மாறும் செவ்வாய், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தெளிவையும், வலிமையையும் தருவதால், தடைகள் அனைத்தையும் தூளாக்கி, நினைத்ததை முடித்து பெருமிதம் அடைவீர்கள். சூரியன் 4, 5 வீடுகளில் நிற்பதால், சுணங்கிக் கிடந்த எண்ணங்களுக்கு, சுறுசுறுப்பு என்னும் இறக்கையை கட்டி விட்டால் மட்டுமே பெண்களின் வேலைகள் žராக நடைபெறும். புதன் இந்த மாதம் 3, 4, 5 வீடுகளில் தங்குவதால், மாணவர்கள் ஆசிரியர் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு நடந்தால், தேர்வு சமயங்களில் பாடங்கள் சுமையாய் தோன்றாது. கலைஞர்கள் தொழில் ரீதியாக சில சில்லறைப் பிரச்சினைகளை சமாளிக்க நேரிடும். செவ்வாய் முதல் வாரம் 5ம் வீட்டில் தங்குவதால், கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தகுந்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால், ஆரோக்கியம் žராக திகழும்.

பிப்ரவரி

அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 11, 15, 19, 20, 24, 28.

இந்த மாதம் முன் பகுதியில் 5ல் இருக்கும் சூரியன் பெண்களுக்கு சிறிது மனக்கவலை தந்தாலும், பின் பகுதியில் 6ம் இடத்தில் சுடர் விடுவதால், முக்கியமான காரியங்களை குறித்த நேரத்தில் நல்ல விதமாக நடத்தி முடிக்கும் திறனை வழங்குவார். பங்குதாரர் இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகுவதோடு அனைவரும் ஒருமுகமாய் உழைப்பதால், ஆசைப்பட்ட லாபம் கிடைக்கும். 15ம் தேதி முதல் 6ம் வீட்டிற்கு மாறும் செவ்வாய், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தெளிவையும் வலிமையையும் தருவதால், தடைகள் அனைத்தையும் தூளாக்கி, நினைத்ததை முடித்து பெருமிதம் அடைவார்கள். 18ம் தேதி முதல் புதனும் 6ம் இடத்திற்கு செல்வதால், மாணவர்கள் புதிய சிந்தனைகள் தோன்றிய வண்ணம் இருக்கும். இவை யாவும் செயல் வடிவாக்கம் பெறும் வாய்ப்பும் தானே வந்து சேரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சவாலான வேலைகளை சாதாரணமாக செய்து முடிப்பார்கள். 24ம் தேதி முதல் சுக்ரன் பஞ்சம வீட்டிற்கு மாறுவதால், குடும்ப உறவுகளின் நெருக்கம் அதிகமாகும்.

மார்ச்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 14, 15, 19, 23, 24, 28.

மாத முன் பகுதியில் 6ம் வீட்டில் ஜொலிக்கும் சூரியன் வியாபாரிகளுக்கு அரசு வழி சாதகங்களை அள்ளித்தெளிப்பார். பிறகு சூரியன் 7ம் வீட்டுக்கு போவதால், பெண்கள் வார்த்தைகளை அளவாக பயன்படுத்தி வந்தால் உங்கள் அருமையை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். 25ம் தேதி முதல் செவ்வாயும் 7ம் வீட்டுக்கு மாறுவதால், வாகனப் பராமரிப்பிற்கென்று அதிக பணம் செலவழித்தாலும், முழு திருப்தி இராது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களோடு வாக்கு வாதத்தில் ஈடுபடும் பணியாளர்களை வேறு இடத்திற்கு மாற்றுவது நல்லது. 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை புதனும் 7ம் இடத்தில் வளைய வருவதால், புதிய ஒப்பந்தங்களை ஒத்துக்கொள்ளும் முன் கலைஞர்கள் அதில் உள்ள சாராம்சத்தை அறிந்து கொள்வது அவசியம். பிறகு அஷ்டம வீட்டிற்கு போகும் புதன் சுய தொழில் புரிபவர்களுக்கு வேண்டிய மனத் தெளிவைத் தந்திடுவார். 22ம் தேதி முதல் சுக்ரன் 6ம் இடத்தில் சுற்றுவதால், மாணவர்கள் டாம்பீக செலவுகளுக்கு தலையாட்டாமல் இருந்தால், பொருளாதாரம் கையைக் கடிக்காது.

ஏப்ரல்

அதிருஷ்ட நாட்கள்: 1, 9, 10, 15, 18, 19, 24, 27, 28

சூரியன் 7, 8 வீடுகளில் சுழலுவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் கருத்துப் பரிமாற்றங்களின் போது, கனல் பறக்கும் வார்த்தைகளை களைந்து விடுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு தனி மதிப்பிருக்கும். முதியவர்கள் வாய்க்கு பிடித்த உணவைவிட, வயிற்றுக்கு பிடித்த உணவு வகைகளை செய்தால் ஆரோக்கியம் நலிவடையாமல் இருக்கும். செவ்வாய் இந்த மாதம் முழுவதும் 7ம் இடத்தில். பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். மேலும் இல்லத்தில் விலையுயர்ந்த மின் சாதனங்களை கையாளும்போது, உரிய விதிமுறைகளை அனுசரித்தால், வீண் பழுதுகள் ஏற்படாது. 7ல் இருக்கும் புதன் ஏப்.1 முதல் புதன் வக்ரம் ஆகி 23ல் வக்ர நிவர்த்தி பெற்று விடுகிறார். வியாபாரிகள் வரவு செலவு கணக்குகளை எழுதி வாருங்கள். வீண் செலவுகளை குறைக்க முடியும். சுக்ரனும் 16ம் தேதி முதல் 7ம் வீட்டில் புதனோடு இணைவதால், கலைஞர்கள் தங்கள் செல்வாக்கை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்வது அவர்களின் செயல்பாட்டில் அடங்கியுள்ளது.

மே

அதிருஷ்ட நாட்கள்: 1, 4, 6, 10, 13, 15, 19, 22, 24, 28

குரு 7ம் தேதி முதல் அஷ்டம வீட்டில் அமர்கிறார். சுய தொழில் புரிபவர்கள், சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டால், முன்னேற்றம் என்பது எளிதில் சாத்தியமாகும். மாணவர்கள் பண விஷயங்களில், நண்பர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். 3ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் வியாபாரிகள், பத்திரங்களை தந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சூரியன் இந்த மாதம் 8, 9 வீடுகளில் நகர்வதால், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கடுமை காட்டாமல் நண்பர்களைப் போல் நடத்தினால், வழி தவறாமல் இருப்பார்கள். குடும்பத்தில் பண விஷயங்களுக்காக சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் கௌரவத்திற்கு பங்கம் வரும் காரியங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது. சுக்ரன், புதன் ஆகிய இரு கிரகங்களும், 11ம் தேதி முதல் அஷ்டம வீட்டில் தங்குவதால், பெண்களுக்கு இந்த மாதம் அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பிருக்கும். உங்களை எதிரியாய் நினைத்தவர்கள் உங்கள் அருமை உணர்ந்து உங்கள் பக்கம் வருவார்கள். கலைஞர்கள் இல்லத்தை அலங்கரிக்கும் முயற்சியில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஜூன்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 7, 10, 15, 16, 19, 24, 25

சூரியன் மாத முன் பகுதியில் 9ம் இடத்தில் நிற்பதால், நிலுவையில் உள்ள தொகைகளை வசூலிக்க வியாபாரிகள் சிறிது சிரமங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். நீண்ட தூரம் வாகனங்களில் பயணம் செய்பவர்கள், வாகனம் ஓட்டும் போது விவேகத்தைக் கடைபிடித்து வருவது புத்திசாலித்தனம். பிறகு சூரியன் 10ம் வீட்டுக்கு தாவுவதால், குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீர்ந்து, ஒற்றுமை சிறக்கும். புதிய தொழில் முயற்சி, பணி மாற்றம் மற்றும் இடமாற்றத்திற்கான எண்ணங்கள் தக்க நேரத்தில் ஈடேறும் செவ்வாய் 12ம் தேதி முதல் 9ம் வீட்டுக்கு மாறுவதால், வீடு, மனை நிலம் வாங்குகையில், பத்திரத்தை சரிபார்த்த பின் பணத்தைக் கட்டுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்தால், இல்லறம் நல்லறமாகத் திகழும். புதனும் 13ம் தேதி வரை 9ம் இடத்தில் நிற்பதால், உங்களின் மறைமுக எதிரிகளின் கை மேலோங்கும். விரும்பிய பலன் கிடைப்பதற்காக மாணவர்கள் கடினமாகவும், கவனமாகவும் உழைக்க வேண்டியிருக்கும். பிறகு புதன் 10, 11 வீடுகளில் சுழல்வதால், வியாபாரிகள் தேனீ போல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களை பெற எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். சுக்ரன் 4ம் தேதி முதல் 9ம் இடத்தில் ஒய்யார நடை போடுவதால், கலைஞர்களின் மனதில் இருந்த கவலை நீங்கி கலகலப்பாக இருப்பார்கள். 6ம் தேதி முதல் ராகு 3ம் வீட்டில் நிற்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் சில சலுகைகளைப் பெற எடுக்கும் முயற்சி பலிதமாகும். கேது பகவான் 9ம் இடத்திற்கு மாறுகிறார். சுய தொழில் புரிபவர்களுக்கு கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வராமல் அதோ இதோ என இழுத்துக் கொண்டே இருக்கும்.

ஜூலை

அதிருஷ்ட நாட்கள்: 1, 3, 5, 10, 12, 14, 19, 21, 28, 30.

சூரியன் இந்த மாதம் 10, 11 வீடுகளில் ஒளிர்வதால், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் இருக்கும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். எட்டி நின்றவரெல்லாம் உங்களுடன் உறவு கொண்டாட வருவர். செவ்வாய் 25ம் தேதி முதல் 10ம் வீட்டில் நிற்பதால், அலுவலக சூழல் அனுசரணையாய் திகழ பணியாளர்களிடம் பக்குவமாக நடப்பது நலம். உங்கள் கோபமே பல சமயம் உங்களுக்கு வர வேண்டிய நன்மைக்குத் தடைபோடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 19ம் தேதி வரை 11ல் இருக்கும் புதன் வியாபாரிகளுக்கு, குறைந்த முலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டித் தருவார். மாணவர்களுக்கு உயர்கல்வியில் விரும்பிய பாடம் கிடைக்கப்பெறும். பிறகு புதன் 12ம் இடத்தில் பதுங்குவதால், கவனத்தை திசை திருப்பும் இடங்களுக்கு போவதைத் தவிர்த்துவிடவும். சுக்ரன் 2ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை 10ம் இடத்தில் நிற்கிறார். பொது வாழ்வில் இருப்பவர்கள் முக்கியமான தருணங்களில் பொறுமையாய் இருந்தால், காரியம் பலிதமாகும். கலைஞர்கள் தங்கள் திறமையை பட்டை தீட்டிக் கொண்டாலும் தகுந்த நேரம் வரும் வரை காத்திருப்பது அவசியம். பிறகு சுக்ரன் 11ம் இடத்திற்கு போவதால், சேமிப்பால் உங்கள் வசதியும், வளமும் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ஆகஸ்ட்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 15, 19, 24, 28

சூரியன் இந்த மாதம் முன் பகுதியில் 11ம் வீட்டில் வலம் வருவது போல், மாணவர்களும் கலை விழா, போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்று வலம் வருவார்கள். பிறகு சூரியன் 12ம் இடத்தில் மறைவதால், அனுசரித்து நடந்து கொண்டால், கனவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படாமல் இருக்கும். வாகன பயணங்கள் மற்றும் பராமரிப்பிற்கென கணிசமாக பணம் செலவு செய்யும் நிலை இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் சலனம், சபலம்-இரண்டையும் புறந்தள்ளி விட்டு வேலை செய்தால் சிறப்பான நிலையை அடைய முடியும். செவ்வாய் இந்த மாதம் 10ம் வீட்டில் நிற்பதால், பணியிடத்தில் அவசியமற்ற உரையாடல்களைத் தவிர்த்து விடுங்கள். மேலும் பழக்கமில்லாத நபர்களிடம் பொறுப்புக்களைத் தர வேண்டாம். 12ம் வீட்டில் இருக்கும் புதன் 4ம் தேதி முதல் 26ம் தேதி வரை வக்ர கதியில் இருந்து 27ம் தேதி முதல் வக்ர நிவர்த்தி பெறுகிறார். வியாபாரிகள் எதிலும் அகலக் கால் வைக்காமலிருப்பது நல்லது. கலைஞர்களுக்கு தங்கள் திறமையால் விழா ஆகியவற்றில் பரிசுகளை அள்ளி வரும் வாய்ப்புக்களை 17ம் தேதி முதல் 12ம் இடம் செல்லும் சுக்ரன் அளிப்பார்.

செப்டம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28.

சூரியன் 12, 1 வீடுகளில் நிற்பதால், முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால், ஓரளவு மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறப்புகள் எதிர்பார்த்த அளவிற்கு உதவிகரமாய் இருப்பது சந்தேகமே. பெண்கள் வீண்பழி போடத்தயாராய் இருப்பவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம். செவ்வாய் 9ம் தேதி முதல் 11ம் இடத்திற்கு மாறுவதால், வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும். உறவுகள் மற்றும் நண்பர்களோடு செலவு செய்யும் நேரம் இனிமையாக அமையும். உங்களின் கணிசமான உழைப்பால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். இந்த மாதம் புதன் 12, 1 வீடுகளில் நிற்பதால், வியாபாரிகள் கண் மூடித்தனமாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். பெண்கள் அதிக பரபரப்பு, அதிக ஓய்வு இரண்டும் உங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்ற இடம் கொடாதீர்கள். சுக்ரன் 10ம் தேதி முதல் 1ம் இடத்திற்கு தாவுவதால், வாடிக்கையாளர்களின் ஆதரவால், புதிய கிளைகளைத் திறக்கும் வாய்ப்பு மலரும்.

அக்டோபர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 9, 10, 18, 19, 24, 27, 28

சூரியன் 1, 2 வீடுகளில் சஞ்சரிப்பதால், பெண்கள் கடன்பட்டு புதிய பொருட்களை வாங்காமலிருப்பது நலம். மாணவர்கள் உறவாடிக் கெடுப்பவர்களிடமிருந்து தள்ளி இருப்பது அவசியம். சிக்கலான சமயங்களில் மாணவர்கள் சமயோசிதமாக செயல்பட்டால், எதனையும் சாதிக்க முடியும். செவ்வாய் 30ம் தேதி முதல் 12ம் இடத்திற்கு போவதால், பணியில் இருப்பவர்கள் கருத்தரங்கு, செயற்குழு ஆகியவற்றில் வீண் வாக்குவாதங்களில் இறங்க வேண்டாம். புதன் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை 2ம் இடத்தில் நிற்கிறார். இல்லத்தில் கிரகப் பிரவேசம், திருமணம் ஆகியவை கோலாகலமாக நடந்தேறும். மாணவர்களுக்கு புதிய மொழியைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும். பிறகு புதன் 3-ம் வீட்டுக்குப் போவதால், பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். சுக்ரன் 2, 3 வீடுகளில் பிரகாசிப்பதால், கலைஞர்களுக்கு புதிய பொருட்களின் சேர்க்கை இல்லத்தில் கூடும். தாமதப்பட்ட சுப நிகழ்ச்சிகளை விரைந்து முடிக்க மேற்கொள்ளும் முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும்.

நவம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 2, 6, 10, 11, 15, 19, 20, 24, 28, 29.

சூரியன் முன் பகுதியில் 2ம் இடத்தில் தங்கியிருப்பதால், வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது அவசியம். பின் சூரியன் 3ம் வீட்டிற்கு மாறுவதால், குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி குதூகலம் குடியேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு வியாபாரம் விருத்தியாகும். செவ்வாய் இந்த மாதம் 12ம் இடத்தில் நிற்பதால் உறவினர்களின் சச்சரவால், இல்லத்தில் அமைதியின் சதவீதம் குறையும். வியாபாரிகள் வழக்கு சம்பந்தமான விவகாரங்களால் தொய்வு இல்லாமல் செயல்படுவது அவசியம். 3ம் இடத்தில் இருக்கும் புதன் 9ம் தேதி முதல் வக்ரம் அடைகிறார். கலைஞர்கள் பொது இடங்களில், தங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். சுக்ரன் 4ம் இடத்தில் நங்கூரம் போட்டிருப்பதால் பெண்களுக்கு மனதில் இருந்த கலக்கம் நீங்கி தைரியமாக முடிவெடுக்கும் ஆற்றல் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் கருத்துக்களை கோர்வையாக சொல்லி, நல்ல பெயரை பெற்றுவிடுவார்கள். 14ம் தேதி முதல் சனி பகவான் 2ம் வீட்டில் அமர்வதால், வெளிவட்டாரத் தொடர்புகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவ்வளவு லாபகரமாய் இராது.

டிசம்பர்

அதிருஷ்ட நாட்கள்: 1, 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28.

சூரியன் 15ம் தேதி வரை 3ம் இடத்தில் இருப்பதால், பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, தடை என்ற சொல்லுக்கு இடமின்றி வெற்றிகள் வந்து குவியும். தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். பின் சூரியன் 4ம் வீட்டில் நிற்கிறார். புதிய மனிதர்களின் தொடர்பு புதிய தொல்லைகளுக்கு வித்திடும் நிலையிருப்பதால், பணியில் இருப்பவர்கள் எவரிடமும் அளவாகப் பழகி வருதல் நல்லது. செவ்வாய் இந்த மாதமும் 12ம் வீட்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். சுய தொழில் புரிபவர்கள் கணக்கில் உள்ள சிக்கல்கள் அவ்வப்போது தீர்ந்து விடுவது அவசியம். வியாபாரிகள் கடனுக்குரிய தொகை சரியான நேரத்தில் கட்டப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்துக் கொள்வது நலம். 14ம் தேதி வக்ர நிவர்த்தி பெறும் புதன் இந்த மாதம் 3ம் வீட்டிற்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பதால், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கோப தாபம் ஆகியவற்றை கொட்டினால், பல நேரங்களில் அதுவே பிரச்சினைக்குக் காரணமாகிவிடும். சுக்ரன் 16ம் தேதி முதல் 5ம் இடத்தில் அமர்வதால், கலைஞர்களுக்கு தொழிலிருந்த நெருக்கடி விலகி, மீண்டும் வாய்ப்புக்கள் வர ஆரம்பிக்கும்.

Site Meter